புதுச்சேரியில் மதவாத ஆட்சி உருவாக விடக்கூடாது; தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கானது அல்ல தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியையும் தமிழகத்தையும் பிரிக்க முடியாது
புதுச்சேரியில் திமுக அவைத்தலைவர் சிவக்குமார் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞருக்கு தந்தை பெரியாருடன் பழகக்கூடிய பாதையை அமைத்துக்கொடுத்த ஊர் புதுச்சேரி, முத்தமிழறிஞர் கலைஞர், கொள்கை உரம் பெற்ற ஊர் புதுச்சேரி என தெரிவித்தார். புதுச்சேரிக்கும், திராவிட இயக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. புதுச்சேரி மீது எனக்கு தனி பாசம் உண்டு; தமிழ்நாட்டையும், புதுச்சேரியையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் உங்களில் ஒருவனாக மக்களுக்காக பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி
புதுச்சேரியில் மதவாத ஆட்சி உருவாக விடக்கூடாது, தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கானது அல்ல, புதுச்சேரி முதல்வர் நல்லவர் தான், ஆனால் வல்லவராகவும் இருக்க வேண்டும். புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டி படைக்கும் ஆட்சி நடக்கிறது. அங்கு மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது, புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என தெரிவித்தவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுகவினர் இப்போதே தயாராகி பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்