தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு..! பரபரக்கும் தலைமைச் செயலகம்..!

By Selva KathirFirst Published Jun 18, 2021, 9:27 AM IST
Highlights

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை சுமார் 18 ஆண்டுகளாக தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அனுமதி கிடையாது.

தமிழகத்தில் மறுபடியும் லாட்டரி சீட்டு விற்பனையை கொண்டு வருவது தொடர்பான முக்கிய ஆலோசனை சென்னை கோட்டையில் நடைபெற்று இருப்பதாக வெளியான தகவல் தான் தற்போது தமிழக அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது முதல் தற்போது வரை சுமார் 18 ஆண்டுகளாக தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அனுமதி கிடையாது. இடையே கடந்த 2006ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக வந்த போது லாட்டரி சீட்டு விற்பனை மறுபடியும் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. லாட்டரி வியாபாரத்தில் மன்னன் என்று கூறப்படும் மார்ட்டின் அப்போது கலைஞர் குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்தார். மேலும் முதலமைச்சராக இருந்த கலைஞரின் கதை வசனத்தில் லாட்டரி மார்ட்டின் திரைப்படமே தயாரித்தார்.

இவற்றை எல்லாம் வைத்து கலைஞர் ஆட்சியில் மறுபடியும் லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலைஞர் ஆட்சி முடியும் வரை மார்ட்டின் எவ்வளவோ முயன்றும் அவரால் தமிழகத்தில் லாட்டரி விற்பனையை கொண்டு வர முடியவில்லை. இதனிடையே அதன் பிறகு அதிமுக அரசு சுமார் பத்து வருட காலம் ஆட்சியில் இருந்த போதும் லாட்டரி விற்பனைக்கு மார்ட்டினால் அனுமதி பெற முடியவில்லை. இந்த நிலையில் மறுபடியும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் லாட்டரி விற்பனைக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

இது ஏதோ எதேச்சையாக வெளியிடப்பட்ட ஆதரவுக் குரல் இல்லை என்று அப்போதே கூறப்பட்டது. தமிழகத்தில் மறுபடியும் லாட்டரியை கொண்டு வருவதற்கான முதல் படி என்று சொல்லப்பட்டது. ஏனென்றால் லாட்டரிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது வெறும் காங்கிரஸ் எம்பி அல்ல, இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் கூட. ஏனென்றால் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களுக்கு மார்ட்டின் மிகவும் நெருக்கம். இதனிடையே தமிழக அரசு மிகுந்த பொருளாதார நெருக்கடியில் உள்ளது. தற்போது அமலில் உள்ள திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்ததே தமிழகத்திடம் நிதி இல்லை. டாஸ்மாக் கடைகளை சார்ந்தே தமிழக அரசின் என்ஜின் இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் இந்த நிதி ஆதாரங்கள் போதாது. மேலும் கடன்களையும் வாங்க முடியாது. எனவே லாட்டரி போன்ற வருமானம் அதிகமுள்ள வியாபாரத்தை மறுபடியும் அனுமதித்தால் தான் கல்லா கட்ட முடியும் என்பதுடன் தமிழகத்தின் வருமானத்தையும் பெருக்க முடியும் என்கிறார்கள். இதனால் லாட்டரி சீட்டை எப்படி சிக்கல் இல்லாமல் மறுபடியும் தமிழகத்திற்கு கொண்டு வரலாம் என்கிற ஆலோசனையும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் மறுபடியும் லாட்டரி விற்பனை நடைபெறுமா என்று செய்தியாளர் சந்திப்பின் போது நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ஆமாம் என்றோ இல்லை என்றோ நேரடியாக பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில் சென்னை கோட்டைக்கே சென்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை லாட்டரி அதிபர் மார்ட்டின் சந்தித்ததாக ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் தலைமறைவாக இருந்த லாட்டரி மார்ட்டின் தற்போது தலைமைச் செயலகம் வரும் அளவிற்கு துணிச்சல் வரக்காரணம் அவரது மகன்களில் ஒருவர் தற்போது அதிகார மையமாக திகழும் மாப்பிள்ளை என்று அழைக்கப்படுபவருக்க படுநெருக்கம் என்பது தான் என்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு மேலிடம் கிட்டத்தட்ட பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

click me!