2017 ஆண்டே பல லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான மதன்.. போட்டுக் கொடுத்த மனைவி.

By Ezhilarasan BabuFirst Published Jun 18, 2021, 9:23 AM IST
Highlights

யூ-டியூபர் மதன் 2017 ஆண்டே பல லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதால் முகத்தைக் காட்டாமல் யூ-டியூப் சேனல் நடத்தி வந்தது மதன் மனைவி கிருத்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

யூ-டியூபர் மதன் 2017 ஆண்டே பல லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானதால் முகத்தைக் காட்டாமல் யூ-டியூப் சேனல் நடத்தி வந்தது மதன் மனைவி கிருத்திகாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

"பப்ஜி" விளையாட்டை  ஆபாசமாக பேசி யூ-டியூப்பில் வெளியிட்ட வழக்கில் அட்மினாக செயல்பட்ட மதனின் மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கிருத்திகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி  ஒளிபரப்புவதன் மூலம் மாதந்தோறும் 7 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததும், 3 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாக்களையும் அதன் மூலம் வாங்கியதும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் பப்ஜி மதன் கடந்த 2017 ஆம் ஆண்டு அம்பத்தூர் கள்ளிக் குப்பம் பகுதியில் "ஹீரோ" என்ற பெயரில் ஆடம்பரமான அசைவ உணவகம் ஒன்றை துவங்கி நடத்தி வந்ததும், உணவகத்தின் பேரில் மதன் வங்கிகளிடம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கடனை வாங்கியதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நஷ்டம் ஏற்பட்டதால் உணவகத்தை நடத்த முடியாமல் போக வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தாமலும், கடை உரிமையாளருக்கு பலமாத வாடகை பாக்கியை கொடுக்காமலும் மதன் தலைமறைவு ஆனதும் கிருத்திகா அளித்த வாக்குமூலத்தின் மூலம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் அப்போதே புகார் அளித்திருப்பதும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது. கிருத்திகாவை அப்போது காதலித்து வந்த மதன் இந்த பண மோசடியில் ஈடுபட்டபோதுதான், திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் கிருத்திகாவை அழைத்து கொண்டு தலைமறைவானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதன் பிறகு தான் "ஹீரோ" மதனாக இருந்த அவர் தனது அடையாளத்தை மறைத்து மனைவி கிருத்திகாவின் உதவியுடன் யூ-டியூப் சேனலைத் தொடங்கி "பப்ஜி" மதனாக உருவெடுத்து லட்சங்களை சம்பாதிக்க துவங்கியுள்ளார். இதுமட்டுமின்றி பப்ஜி மதன் வீடியோ பதிவேற்றம் செய்வதற்காக 3 சிம் கார்டுகளை பயன்படுத்தியதும், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தடை செய்யப்பட்ட பப்ஜி மட்டுமின்றி கொரிய விளையாட்டு செயலிகளையும் வி.பி.என் சர்வரை பயன்படுத்தி ஒளிப்பரப்பு செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வீடியோக்கள் பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ள நிலையில், சிறுமிகளிடம் மதன் பணப் பறிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயர் நீதிமன்றத்தில் 30 சதவிகித சிறுவர்கள் மதனின் யூ-டியூப் சேனலை பின் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை திரட்டும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
 

click me!