அனைத்து தரப்பு மாணவர்களும் திருப்திப்படும் வகையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்ளிடம் கூறுகையில், “12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலோசனைகளின் அடிப்படையிலும் சி.பி.எஸ்.இ. எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளது என்பதை ஆராய்ந்தும் அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
இந்த விஷயத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களையும் கவனத்தில் கொண்டுடிருக்கிறோம். அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா? அல்லது அவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவதா என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும். இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகப் பல்வேறு புகார்கள் வருகின்றன. அந்தப் பள்ளிகளைக் கண்டித்து வருகிறோம். அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால், அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்படும்போது பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 2 லட்சம் லேப்டாப்புகள் இன்னும் வழங்கப்படவில்லை. அந்த மாணவர்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி லேப் டாப்கள் வழங்கப்படும்.” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.