வலிமை சிமெண்ட் வந்த பிறகு பாருங்க.. மற்ற சிமெண்ட் எல்லாம் தன்னால விலை குறையும்.. அமைச்சர் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2021, 5:14 PM IST
Highlights

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு குழு ஏற்படுத்தி சிமெண்ட் ஆலை அதிபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 490 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் 420 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அரசின் வலிமை சிமெண்ட் சந்தைக்கு வந்த பின்னர் வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை வெகுவாக குறையும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பாமக சட்ட மன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று அதைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கட்டுமானப் பொருட்களான கம்பி, சிமெண்ட், ஜல்லி போன்ற பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. வீடு கட்ட வேண்டும் என்ற  ஆர்வத்தில் இருந்தவர்களின் கனவில் இடி விழுந்துள்ளது. அதேபோல் வங்கிகளில் லோன் வாங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த பலருக்கும் இந்த விலையேற்றம் பேரிடியாக விழுந்துள்ளது. 

ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான வேலை எடுத்து செய்து வருபவர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். தொடர் விலையேற்றத்தின் காரணமாக கட்டுமான பணிகளை பாதியிலேயே நிறுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்னர் 320 முதல் 350 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த  ஒரு மூட்டை சிமெண்ட் விலை, கடந்த ஒரு மாதமாக 420 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது. 40 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ கட்டுமான கம்பி விலை 75 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு குழு ஏற்படுத்தி சிமெண்ட் ஆலை அதிபர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 490 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் 420 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது சிமெண்ட் விலை உயர்வால்  கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதிலளித்து பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் 490 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிமெண்ட் விலை, அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் 420 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அரசின் டான்செம்  நிறுவனத்தின் ஆலைகள் மூலம் சிமெண்ட் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அரசு சிமெண்ட் வலிமை என்ற பெயரில் விற்பனைக்கு வர உள்ளது என்றும், விரைவில் வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வந்த உடன், வெளிச் சந்தைகளில் மற்ற சிமெண்ட் மூட்டைகளின் விலை வெகுவாக குறையும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

click me!