திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றனர். அதன்படி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய முஸ்லீம் லீக், கொ.ம.தே.க கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியையும் ஒதுக்கி உள்ளது.
அதே போல் விசிகவுக்கு 2 தொகுதியும், மதிமுகவுக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் உடனான முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் சரிப்பட்டு வராது.. நேராக ஆளுநர் மாளிகைக்கு வண்டியை விடும் இபிஎஸ்? என்ன காரணம் தெரியுமா?
இதனிடையே இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் இருந்தது. குறிப்பாக கடந்த முறை போட்டியிட்ட கோவை தொகுதியை கமல் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் விரைவில் நல்ல செய்தியை சொல்வதாக கமல்ஹாசனும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார். தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திமுக - மநீம இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு சீட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசனும் கையெழுத்திட்டுள்ளனர்.
வரும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு சீட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் அக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 2024 மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று கூறினார். ஆனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.