
இரண்டு மாத வாடகைப் பணம் தரவில்லை எனக்கூறி நடிகை விஜய லட்சுமி மீது தனியார் விடுதி மேலாளர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி தனது சகோதரியுடன் சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனியார் விடுதியில் (Service Apartment) கடந்த சில மாதங்களாக தங்கி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2 மாதங்களாக நடிகை விஜயலட்சுமி வாடகை தரவில்லை எனக்கூறி அவரின் அறையில் இருந்த பொருட்களை வேறு அறைக்கு மாற்றி விடுதியை காலி செய்ய மேலாளர் விக்னேஷ் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விடுதி மேலாளருடன் நடிகை விஜயலட்சுமி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் விடுதி மேலாளர் விக்னேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் கடந்த 2 மாதங்களாக நடிகை விஜயலட்சுமி வாடகை தராமல் விடுதியில் தங்கி வந்ததாகவும், வாடகைப் பணத்தைக் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி தாக்க முயற்ச்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகை விஜய லட்சுமி கிழக்கு கடற்கரை சாலையில் தனது சகோதரியுடன் தங்கி வந்த விடுதியிலும் இதேபோல வாடகை பிரச்சனை காரணமாக விடுதிப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் வாடகை பிரச்சனையில் விஜயலட்சுமி சிக்கியுள்ளார்.