Lockup Death:மகனை பறி கொடுத்தவர்களிடம் அதிகாரிகள் பேரம் பேசிய வீடியோ .. கழுவி கழுவி ஊற்றும் நெட்டீசன்கள்.

Published : Dec 09, 2021, 05:16 PM ISTUpdated : Dec 09, 2021, 05:25 PM IST
Lockup Death:மகனை பறி கொடுத்தவர்களிடம் அதிகாரிகள் பேரம் பேசிய வீடியோ .. கழுவி கழுவி ஊற்றும் நெட்டீசன்கள்.

சுருக்கம்

அதில் உயிரிழந்த மாணவருக்கு நிவாரணம் பெற்றுத்தர அதிகாரிகள் தயாராக உள்ளனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அதற்கான உத்தரவை பிறப்பிக்க தயாராக இருக்கின்றனர். 

போலீஸ் விசாரணைக்கு பின்னர் உயிரிழந்த மாணவர் மணிகண்டன் விவகாரத்தில் போராட்டம் நடத்திய  உறவினர்களிடம் அதிகாரிகள் பேரம் பேசும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உயிரிழந்த மாணவருக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பரிந்துரை செய்கிறோம், இன்றைக்கே அதை செய்கிறோம், ஆதலால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அதிகாரிகள் கூறியிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான வீடியோவை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து பலவகைகளில் விமர்சித்து வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் காவல் நிலையத்தில் நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் 6 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்ட நிலையில் வீட்டில்  ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதால் தான் மகன் இறந்தான் என அவரது பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் உடன் 1 கோடி ரூபாய் நிவாரண வழங்க வேண்டும் என அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 7 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாணவனின் இந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மாணவரின் மரணத்திற்கு காவல்துறைதான் காரணம் என பலரும் பல வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் மாணவர் மரணத்திற்கு காரணமாக சொல்லப்படும் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், திமுக அரசு பொறுப்பேற்ற ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றும் இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும், காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த அரசியில் இயக்கங்களில் ஒன்றான பார்வர்டு பிளாக் கட்சி, எந்த குற்றப் பின்னணியும் இல்லாத கல்லூரி மாணவனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர், காவல் நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தி ஆறு மணி நேரம் கழித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்து அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார்கள். உடல் சோர்வாக காணப்பட்ட மணிகண்டனை பெற்றோர் ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். வீட்டிற்கு சென்றது முதல் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்த மணிகண்டன் சிறிது நேரத்திலேயே இறந்து விட்டார். எந்த நோய் நொடியும் இல்லாதவன் காவலர் பணிக்கான உடல் தகுதியோடு இருந்த மாணவனை கீழத்தூவல் காவல் ஆய்வாளர் கொடூரமான முறையில் தாக்கியது தான் அவரது மரணத்திற்கு காரணம் என அனைவருக்கும் நன்றாக தெரிகிறது. இந்த விஷயத்தில் காவல் அரசராக உள்ள போலீஸ் டிஜிபி நேரடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்தி மாணவன் மணிகண்டன் மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சம்பவத்தால் முதுகுளத்தூர் பகுதியில் பெரிதும் சட்டம்-ஒழுங்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் டிஜிபி அவர்களே நேரடியாக விசாரித்து மாணவனின் மரணத்திற்கு நீதியும் உரிய நிவாரணமும் பெற்றுத்தந்து சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மாணவர் உயிரிழந்த 4 நாட்கள் ஆகியும் பெற்றோர்கள் உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வந்தனர். 
அதேநேரத்தில் மணிகண்டனின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்யவேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை மறு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு ஊடற்கூறாய்வு செய்யப்பட்டது. மணிகண்டன் தரப்பில் ஒரு மருத்துவரும் பங்கேற்றார். உடற்கூறாய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. பின்னர் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உடற்கூறாய்வு முடிவு வெளிவந்த பிறகுதான் உடலை பெற்றுக்கொள்வோம் என மீண்டும் மணிகண்டனின் பெற்றோர்கள் எதிர்ப்புதெரிவித்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 

"

இதை அடுத்து காவல்துறை உயரதிகாரிகள் மணிகண்டன் பெற்றோர்களை சமாதனப்படுத்தியதையடுத்து உடல் பெற்றுக்கொள்ளப்பட்டது. முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் சமாதானப்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகள் அவரிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் உயிரிழந்த மாணவருக்கு நிவாரணம் பெற்றுத்தர அதிகாரிகள் தயாராக உள்ளனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அதற்கான உத்தரவை பிறப்பிக்க தயாராக இருக்கின்றனர். தேவையான நிவாரணம் இன்றைக்கே கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். ஆனால் போராட்டத்தை உடனே கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் அதை ஏற்க மறுக்கும் அவரது உறவினர்கள் முதல் தலைமுறை பட்டதாரி மாணவன் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் உயிருடன் இருந்திருந்தால் எத்தனையோ உயர் பதவிகளை எட்டி இருக்க முடியும். அதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணமாக அரசு கொடுக்க வேண்டும். மாணவனின் மரணத்திற்கு காரணமான காவலர்கள், காவல் ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அப்படி இல்லை என்றால் போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம் என தெரிவிக்கின்றனர். அதற்கு பதில் இன்றி அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி செல்வது போல் அந்த வீடியோ காட்சிகள் உள்ளது. இந்த  வீடியோவை பலரும் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்ட  மாணவன் உயிரிழந்துவிட்டார், அதற்கு பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடுமா.? இந்த மாணவனுக்கு அநீதி நடந்துள்ளது, ஆனால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் பேரம் பேசுவதை பாருங்கள்... இவர்களால் இறந்த மாணவனின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா? தவறிழைத்தவர்களை தண்டிக்காமல், அவர்களை காப்பாற்றும் முயற்சி இது என. பலரும் பலவகைகளில் விமர்சித்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!