உள்ளாட்சித் தேர்தல்..! தடுமாறும் அதிமுக..! ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து..! காரணம் என்ன?

By Selva KathirFirst Published Aug 5, 2021, 10:21 AM IST
Highlights

அதிமுக தலைமை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளை தற்போது வரை துவங்கவில்லை. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சி நிர்வாகிகளை அழைத்து தொலைபேசி மூலம் ஆலோசனை மட்டுமே நடத்தி வருவதாக கூறுகிறார்கள்.

தமிழகத்தில் ஒன்பதுமாவட்டங்களில் முதற்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பருக்குள் தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆளும் கட்சியாக உள்ள திமுக தற்போது முதலே மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது. மாவட்ட அளவிலான கூட்டத்தை தொடர்ந்து ஒன்றியம், நகரம், பேரூர், கிளை வரையிலான கூட்டத்திற்கு திமுக தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கூட்டங்களை திமுக மேலிடம் நேரடியாக கண்காணித்து வருகிறது. அதே சமயம் அதிமுக தலைமை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளை தற்போது வரை துவங்கவில்லை. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தற்போது கட்சி நிர்வாகிகளை அழைத்து தொலைபேசி மூலம் ஆலோசனை மட்டுமே நடத்தி வருவதாக கூறுகிறார்கள்.

அடுத்த மாதம் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாவட்டங்களில் நகர்புறம், ஊரகம் என இரண்டிற்கும் சேர்த்தே தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அதிமுக திட்டமிட்டது. முதற்கட்டமாக ஒன்பது மாவட்டங்களில் தினசரி இரண்டு மாவட்டங்கள் என நான்கு நாட்களுக்கு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிளைச் செயலாளர்கள் வரை அனைவரையும் இதற்காக சென்னை வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

நேற்று இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நிலை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் மதுசூதனன் உடல்நிலை கடந்த சில நாட்களாகவே ஒரே மாதிரி சீராகவே உள்ளது என்றும் நேற்று குறிப்பிடத்தகுந்த அளவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சொல்கிறார்கள். அப்படி இருக்கையில் திடீர் ரத்துக்கு காரணம் கட்சி நிர்வாகிகள் சிலர் கொடுத்த இடையூறு என்கிறார்கள்.

மாவட்ட அளவிலான ஆலோசனைக்கு மாவட்டச் செயலாளர்கள் அழைத்த போது சில நிர்வாகிகள் வர மறுத்ததாக கூறுகிறார்கள். லோக்கல் உள்ளடி வேலைகளை சுட்டிக்காட்டி கடந்த தேர்தலில் உள்ளடி வேலை பார்த்தவர்களை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே தங்களால் செயல்பட முடியும் என்றும் இல்லை என்றால் தங்கள் பதவியை கூட பறித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறியதாக கூறுகிறார்கள். இது பற்றி விவாதிக்கவே தலைமை சென்னை அழைப்பதாக மாவட்டச் செயலாளர்கள் கூறிய போது, உள்ளடி வேலை பார்த்ததே மாவட்டச் செயலாளர்களான நீங்கள் தான் என்று சில நிர்வாகிகள் எகிறியுள்ளனர். மேலும் இது பற்றி ஏற்கனவே கட்சித் தலைமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

இப்படியான சூழலில் அதிமுக ஆலோசனை கூட்டத்தை கூட்டினால் கட்டாயம் உள்ளே ரகளை நடக்கும் என்பதால் முதலில் அந்த பிரச்சனைகளை சரி செய்யலாம் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கூட்டாக முடிவெடுத்து ஆலோசனையை ரத்து செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.

click me!