உள்ளாட்சித் தேர்தல்..! திமுகவுடன் கூட்டணி.. ராஜ்யசபா பதவி.. தேமுதிக புது அவதாரம்..!

By Selva KathirFirst Published Jul 16, 2021, 8:48 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தேமுதிக நிர்வாகிகள் பலர் திமுகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் யாரையும் திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். 

சட்டப்பேரவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து படு தோல்வி அடைந்து விரக்தியின் உச்சத்தில் இருந்த தேமுதிக மேலிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் சிறிய நம்பிக்கை பிறந்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தேமுதிக நிர்வாகிகள் பலர் திமுகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் யாரையும் திமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் சுமார் 10க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுகவில் சேர நேரம் கேட்டு காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. தேடி வருபவர்களை வேண்டாம் என திமுக சொல்லக் காரணம் என விசாரித்த போது தான் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. சட்டப்பேரவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் படு தோல்வியை சந்தித்தது.

அதே சமயம் காவிரி டெல்டா மாவட்டத்தில் பெரு வெற்றி வெற்றது. ஆனால் வட மாவட்டங்களில் ஒரு சில தொகுதிகளில் திமுக வேட்பாளர்களாக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஒரு சில தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் திமுக வேட்பாளர்கள் தோற்கவும் செய்திருந்தனர். இதற்கு காரணம் அதிமுக – பாமக கூட்டணி என திமுக மேலிடம் நம்புகிறது. பாமக அதிமுகவுடன் இருக்கும் காரணத்தினால் தான் வட மாவட்டங்களை முழுவதுமாக திமுகவால் கைப்பற்ற முடியவில்லை என்பதை புரிந்து வைத்திருக்கிறது திமுக மேலிடம். இந்த நிலையில் தான் செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிகமான வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பது தான் திமுகவின் இலக்கு. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மேயர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றி இருந்தது. அதே பாணியில் அனைத்து மேயர் பதவிகள் மட்டும் அல்லாமல் முக்கிய நகராட்சிப் பதவிகள் அதிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் வெற்றி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று என்று திமுக கணக்கு போடுகிறது. அந்த வகையில் இதற்கு பாமக இடையூறாக இருக்கும் என்றும் திமுக நம்புகிறது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் வட மாவட்டங்களில் பாமகவை எதிர்கொள்ள தேமுதிகவை திமுக எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள்.

இதனால் தான் யாரும் எதிர்பாராத வண்ணம் கடந்த வாரம் திடீரென மு.க.ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தேடிச் சென்று சந்தித்ததாக கூறுகிறார்கள். அந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்றாலும் அது அரசியலுக்கான சந்திப்பாகவே கருதுகிறார்கள். இந்த சந்திப்பு முடிந்த பிறகு தேமுதிகவில் சில ஆலோசனைகள் நடைபெற்றதாக சொல்கிறார்கள். இதற்கு முன்பு போல் இல்லாமல் இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிக்கு திமுகவை அணுகலாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். முன்பெல்லாம் தங்களுடன் கூட்டணி வேண்டும் என்றால் தங்களை தேடி வர வேண்டும் என்று தேமுதிக பிடிவாதம் காட்டும். ஆனால் இந்த முறை அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து கூட்டணிக்கு வருவதாக கூறலாம் என்று தேமுதிக முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்கள் மட்டும் அல்லாமல் சுதீசுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவியையும் உறுதி செய்ய வேண்டும் என்கிற திட்டத்தில் தேமுதிக காய் நகர்த்துவதாக கூறுகிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் மட்டும் அல்லாம்ல் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் சமயத்திலும் தேமுதிக தேவை என்பதால் அந்த கட்சி கேட்பதை கொடுக்கவில்லை என்றாலும் கூட்டணியில் இணைவதால் கணிசமான இடங்களை கொடுக்க திமுக தயாராகவே இருக்கும் என்கிறார்கள். இதனை அடுத்து கட்சிப் பணிகளை தீவிரமாக்கியுள்ள தேமுதிக, நிர்வாகிகள் நியமனத்தையும் முழு வேகத்தில் செய்து வருகிறது

click me!