திமுகவுக்கு நம்பி ஓட்டு போட்டோம்... நடுத்தெருவில் நிற்கிறோம் என்கிறார்கள் மக்கள்... மாஜி அமைச்சர் விமர்சனம்.!

By Asianet TamilFirst Published Jul 15, 2021, 9:51 PM IST
Highlights

திமுகவுக்கு நம்பி ஓட்டு போட்டோம், இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறோம் என்று மக்கள் சொல்கிறார்கள் என்று மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
 

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் கலந்தாய்வு கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசுகையில், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, எங்களிடம் ஆட்சி பொறுப்பு இருந்திருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய வழி தெரியும் என்று கூறினார்கள். சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் நீட் தேர்வை ரத்து செய்ய வழி எங்களுக்கு தெரியும் என்று கூறினார்கள். தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விவகாரத்தில் கடைசி வரை எடப்பாடியார் சட்டப்போராட்டம் நடத்தினார். 
இன்னொரு புறம் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி,  435 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை உருவாக்கிக் கொடுத்தார். ஆனால், தற்போதைய திமுக அரசு முன்னாள் நீதியரசர் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்திருக்கிறது. அந்தக் குழுவோ நீட் தேர்வை பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது. நாங்களும் இதை வரவேற்கிறோம். ஆனால், இது எல்லோருக்கும் முன்பே தெரிந்ததுதான். ஏதோ தெரியாத ரகசியத்தை கூறியதுபோல சொல்லியிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதி வெளியாகிவிட்டது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். திமுகவின் 505 தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வில் மாணவர்களுக்கு ஏமாற்றத்தை முதல் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். சுகாதார அமைச்சரும் நீட் தேர்வு நல்லது, மருத்துவப் படிப்புக்கு பயன் தரும் என்று நேரத்துக்கு நேரம் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார். நம்பி ஓட்டு போட்டோம், இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறோம் என்று மக்கள் சொல்கிறார்கள்.
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கூட்டுறவு, தேசிய வங்கிகளில் வாங்கிய ரூ.20 ஆயிரம் கோடி கடனை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் வீர வசனம் பேசாமல் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சி இருக்கும்போது அணை கட்டப்படாமல் தடுக்கப்பட்டது. இப்போது மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறுகிறது. அப்படி கட்டினால் நமது நெற்களஞ்சியம் பாலைவனம் ஆகிவிடும்” என்று உதயகுமார் பேசினார்.
 

click me!