எடப்பாடியின் காதுகளைத் திருகி விளைந்திருக்கும் பயிரை வீணாக்கிடாதீங்க... தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

By vinoth kumarFirst Published Dec 31, 2019, 1:57 PM IST
Highlights

ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றி அழித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் காதுகளைத் திருகி, தேர்தல் நடத்தும்படி கண்டிப்பான உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதன்பிறகும்கூட, முழுமையாகத் தேர்தலை நடத்தி மக்களைச் சந்திக்கும் துணிவின்றி, ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல், அதுவும் இரண்டுகட்டமாக வாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு செயல்பட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.

நீதிமன்றம் அளித்த உத்தரவுகளும் தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கடிதத்தில்;- "ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றி அழித்துக் கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் காதுகளைத் திருகி, தேர்தல் நடத்தும்படி கண்டிப்பான உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதன்பிறகும்கூட, முழுமையாகத் தேர்தலை நடத்தி மக்களைச் சந்திக்கும் துணிவின்றி, ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தல், அதுவும் இரண்டுகட்டமாக வாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு செயல்பட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், காவல்துறையினர் என ஒட்டுமொத்த நிர்வாகத்தையே பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் எனத் திட்டமிட்டு, அனைத்துவிதமான முறைகேடுகளையும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் செய்த நிலையில், மக்களின் பேராதரவு தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் இருப்பதால், தேர்தல் களத்தை நாம் தெம்பாகவே எதிர்கொண்டோம். தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளாம் நீங்களும், தோழமைக் கட்சியின் தொண்டர்களும் ஓய்வறியாமல்-ஒருங்கிணைந்து பணியாற்றிய களங்கள் யாவும் நமக்கான வெற்றி முத்திரையை வாக்குப்பெட்டிக்குள் நிரம்பிடச் செய்திருக்கின்றன.

விளைந்திருக்கும் பயிரை கவனமாக அறுவடை செய்திட வேண்டும். ஒரு நெல்மணிகூட வீணாகிவிடக்கூடாது, ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை கடந்த மடலிலேயே நினைவுபடுத்தியிருந்தேன். அதற்கேற்ப கழகத்தின் சட்டத்துறையும் செயலாற்றியது. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஆளுந்தரப்பின் முறைகேடுகளை முறியடிக்கவும், வாக்குப்பதிவின் போது அவர்கள் நடத்தவிருக்கும் தில்லுமுல்லுகளைத் தடுத்திடவும் கழகத்தின் அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அண்மையில் அ.தி.மு.க. ஆட்சி நடத்திய கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் நடந்த வரைமுறையற்ற விதிமீறல்களையும் சுட்டிக்காட்டி திமுக வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். இந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும். சி.சி.டி.வி. கேமரா மூலம் அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக கண்காணிக்க வேண்டும் திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

திமுக முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை, சட்டத்திற்குட்பட்டவை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. வாக்கு எண்ணிக்கையை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்க ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம், வாக்குகள் பதிவான சீட்டுகளை கேமராவில் பதிவு செய்ய மறுப்பதையும் கழக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியபோது, அதில் உள்ள நியாயத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இறுதியாக, கழகம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தல் சட்டத்தின்படி அமைந்தவைதான் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்து, அதற்கான சுற்றறிக்கையையும் அனுப்பியிருப்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கினை முடித்துவைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகளின் எதிர்பார்ப்பாகும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

click me!