
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் தனிநபரால் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கொமதேக திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக கொமதேக பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் பல்லடம் வந்தார். அங்கு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜகவை பொருத்தவரைம் அக்கட்சியின் வரலாற்றை எடுத்து பாருங்கள். எப்போது எல்லாம் தேர்தல்கள் நடை பெறுகின்றனவோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையை தூண்டிவிடுவார்கள். அதன் மூலம் வாக்காளர்களை கவர வேண்டுகள், அவர்களுடைய வாக்குகளைப் பெற வேண்டும் என்பதில் பாஜகவினர் தீவிரமாக இருப்பார்கள்.
தற்போதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் அது போல்தான் நடக்கிறார்கள். தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பின்புலம் ஏதும் இல்லை. தனிநபர் ஒருவர் செய்த செயலை தமிழக போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆனால், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை இப்படி பேசியிருப்பது தமிழக மக்களிடையே சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கிறது. அதேபோல கர்நாடகாவிலும் பிரச்சினை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சினை என பாஜகவினர் பிரச்சினைகளை அரங்கேற்றி வருகிறார்கள்.” என்று ஈஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “கோவை- திருப்பூர் மாவட்டங்களில் தற்போது கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். மிக முக்கியமான பிரச்சினை இது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அமைச்சர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். அதனால், உடனடியாக அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். விசைத்தறியாளர்கள் போராட்டத்திற்கு உரிய தீர்வை காண வேண்டும்” என்று ஈஸ்வரன் தெரிவித்தார்.