
மக்களுக்கு நன்மை செய்வதில் திமுக-விற்கு பாஜக முழு ஆதரவளிக்கும் என்றும், தமிழக ஆளுநர், பிரதமரை வம்புக்கு இழுத்தால் வட்டியும் முதலுமாக திமுகவிற்கு திருப்பி தரப்படும் என கரூரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.எதிர்க்கட்சியாக இருந்தது முதல் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மோதல் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அந்த மோதல் அதிகமாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் கடந்த கால செயல்பாடுகளை பாஜக தலைவர்கள் மோசமாக விமர்சித்து வந்தனர். ஆனால் எதிர்பார்த்ததை காட்டிலும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியது
இந்நிலையில் திமுகவுக்கும் பாஜகவுக்குமான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. திராவிட கட்சிகளை அழிவிப்பதே தங்களின் இலக்கு என களத்தில் நின்று வரும் பாஜக அதிமுக என்ற திராவிட கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு திமுகவை எதிர்த்து களமாடி வருகின்றது. திமுக அரசியல் எதிரி மட்டுமின்றி சித்தாந்த ரீதியாகவும் பாஜகவை கடுமையாக எதிர்ப்பதால், திமுகவுக்கு எதிரான அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. தற்போது அண்ணாமலை தமிழக பாஜக தலைவரானது முதல் அந்த எதிர்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. மற்ற பாஜக தலைவர்களை காட்டிலும் அண்ணாமலைக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருப்பதால் திமுகவுக்கான எதிர்ப்பும் அதிகரித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தமிழக ஆளுநர் மூலம் திமுகவுக்கு செக் வைக்க பாஜக முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஆர்.என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்ட போது இக்குற்றச்சாட்டை திமுகவில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்றவை வலுவாக முன்வைத்தன. அதேபோல் தற்போது ஆளுநருக்கும் திமுகவுக்குமான மோதல் வெளிப்படையாகவே நடந்து வருகிறது. நீட் கிராமபுற ஏழை எளிய மாணவர்களை பாதிக்கிறது என தமிழக அரசு நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால், ஏழை எளிய மாணவர்களுக்கு உகந்தது நீட் என கூறி தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்.இதேபோல் பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே சித்தாந்த ரீதியான மோதல்கள் இருந்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஒருபுறம் ஆளுநர், மறுபுறம் பாஜக அதிமுக எதிர்க்கட்சிகள் விமர்சனம் என விமர்சனங்களுக்கு மத்தியில் ஆட்சியை கடத்தும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம், பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் பாஜகவுக்கும் திமுகவுக்குமான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பாஜக அதிமுக தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்கிறது என்ற பிரச்சாரத்தை திமுக முன்னெடுத்து வரும் நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக, நீட் தேர்வை விலக்குவோம் என பெய் சொல்லி மாட்டிக் கொண்ட திமுக என அதிமுக பாஜக பதிலடி கொடுத்து வருகின்றன. உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்ற நிலைமையில் அதிமுக பாஜக என இரண்டு கட்சிகளின் விமர்சனத்திற்கும் திமுக ஆளாகி வருகிறது.
நீட் விவகாரத்தில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ஆளுநரை விமர்சித்து கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்ட நிலையில் தற்போது ஆளுநர் உடனான மோதலை வெளிப்படையாகவே நடத்த தொடங்கியுள்ளது திமுக. இந்நிலையில்தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவை பலவகைகளில் காட்டமாக விமர்சித்து வருகிறார். கடந்த எட்டு மாத திமுக ஆட்சியில் மக்களின் வாழ்வில் எந்த விடியலும் ஏற்படவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் அரசு நிறைவேற்றவில்லை, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, தமிழக காவல்துறையில் அதிகாரப் போட்டி நிலவுகிறது, சட்டம் ஒழுங்கு காவல் துறை உளவுத்துறையி ஆதிக்கத்தில் சிக்கித் தவிக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் திமுகவின் ஊழல் நடக்கிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து கரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மக்களுக்கு நன்மை செய்வதில் திமுகவிற்கு பாஜக முழு ஆதரவளிக்கும், மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க திமுக அரசுடன் துணை நிற்கும், ஆனால் தமிழக ஆளுநரையோ, பிரதமரையோ வம்புக்கு இழுத்தால் வட்டியும் முதலுமாக திமுகவுக்கு திருப்பித் தரப்படும் என எச்சரித்துள்ளார். அவரின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.