உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி..! காங்கிரஸ் நடத்திய ரகசிய ஆலோசனை கூட்டம்..!

By Selva KathirFirst Published Sep 6, 2021, 12:55 PM IST
Highlights

கடந்த வாரம் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு டெல்லியில் இருந்து திடீர் அழைப்பு சென்றுள்ளது. குறிப்பட்ட தேதி, இடம் மற்றும் நேரத்தை கூறி தவறாமல் கூட்டத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக மிக மிக முக்கியமான நிர்வாகிகளை மட்டும் ரகசியமாக அழைத்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்.

கடந்த வாரம் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு டெல்லியில் இருந்து திடீர் அழைப்பு சென்றுள்ளது. குறிப்பட்ட தேதி, இடம் மற்றும் நேரத்தை கூறி தவறாமல் கூட்டத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து கூறிய தேதியில், கூறிய இடத்தில், கூறிய நேரத்தில் அனைவரும தவறாமல் ஆஜராகியுள்ளனர். அங்கு தினேஷ் குண்டுராவ் மற்றும் கே.எஸ்.அழகிரி மேடையில் அமர்ந்திருக்க வந்திருந்த நிர்வாகிகளுக்கு அவர்களின் பெயர்களுடன் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

எடுத்த எடுப்பிலேயே உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து தான் ஆலோசனை நடைபெற்று இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் வேறு வழியே இல்லாத காரணத்தினால் திமுக ஒதுக்கிய சொற்ப இடங்களை ஏற்க நேரிட்டது. ஆனால் இந்த முறை அப்படி ஒரு நிலைமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒரே குரலில் கூறியுள்ளனர். மாவட்டத்திற்கு ஒரு சீட் கூட வாங்க முடியாத நிலையில் நாம் எல்லாம் தேசிய கட்சியாக இருந்து என்ன பயன்? என்று சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அத்தோடு காங்கிரசில் இருந்து கொண்டு திமுக தலைமைக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு சில தலைவர்களை வெளிப்படையாகவே சில நிர்வாகிகள் வறுத்து எடுத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கட்சியில் இனி முக்கியத்துவம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் கர்ஜித்துள்ளனர். அத்துடன் திமுக கொடுத்த வாரியத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகளை இனி கட்சியில் அனுமதிக்க கூடாது என்கிற ரீதியில நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்க, தினேஷ் குண்டுராவ் குறுக்கிட்டுள்ளார்.

நிர்வாகிகள் குறை கூறுவதோடு நிற்காமல் தங்கள் பகுதியில் கட்சிக்காக செய்த பணிகளை கூறுமாறு சொல்லிய போது அனைவரும் அமைதியாகியுள்ளனர். அத்தோடு திமுகவோடு கூட்டணி என்று அறிவித்துவிட்டாலும் அது நிரந்தரம் இல்லை. சட்டப்பேரவை தேர்தலை போல் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கொடுப்பதை வாங்கிக் கொண்டு நிற்கும் நிலை இருக்காது.  குறைந்த பட்சம் 20 சதவீதம் முடியாத பட்சத்தில் 15 சதவீத இடங்களை திமுக காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பது தான் ராகுல் காந்தியின் கணக்கு.

இதற்கு குறைவாக நிச்சயாக திமுக ஒதுக்கும் இடங்களை காங்கிரஸ் ஏற்காது என்று குண்டுராவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அத்தோடு புதிய கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்க வேண்டும் என்றால் முதலில் பூத் கமிட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வரையில் அமைக்க வேண்டும் என்று குண்டுராவ் தெரிவித்துள்ளார். எனவே முதலில் பூத் ஏஜெண்டுகளை பூட்டு பூத் கமிட்டிகளை அமைத்து அதற்கான ஆவணங்களை மேலிடத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இருந்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது, உள்ளாட்சித் தேர்தலில் திமுகவை ஓரம்கட்டிவிட்டு காங்கிரஸ் கூட்டணி அமைக்க காய் நகர்த்துவது போல் தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

click me!