
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசே தொடங்க பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செம்மலை, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு அரசே 25 விழுக்காடு மாணவர்களை சேர்த்துவிடும் நிலை உள்ளது. இதனால் அரசு பள்ளிகள் பாதிக்கப் படுகின்றன என தெரிவித்தார்.
இத்தகைய பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, பெற்றோர்களிடம் சீருடை உள்ளிட்ட பெயர்களில் பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன. சமச்சீர் பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் அமல்படுத்தப் பட்ட பிறகு எதற்காக மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயர் இருக்க வேண்டும்? என செம்மலை கேள்வி எழுப்பினார்.
கிராமப்புறங்களில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்ளும், நகர்ப்புறங்களில் 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள்ளும் அரசு பள்ளிகள் இல்லையென்றால் அங்கு கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தலாம். அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழி எல்கேஜி, யுகேஜி படிப்புகளை தொடங்கலாம். இதனால் தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையும். எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அரசு மூடக்கூடாது என்று செம்மலை அறிவுறுத்தினார்..
இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இத்திட்டத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு தர வேண்டிய நிதியை தராமல் வைத்துள்ளது. மாணவர்கள் பாதிக் கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இத்திட்டத்தை சொந்த நிதியில் இருந்து செயல் படுத்தி வருகிறது என தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு தொடங்க சமூக நலத்துறை அமைச்சருடன், இத்துறை அதிகாரிகளுடனும் கலந்தாலோசனை நடந்து வருகிறது என்றார்.அங்கன்வாடி மையங்கள் 90விழுக்காடு அரசு பள்ளி வளாகத்திலேயே உள்ளன. அரசுப்பள்ளிகளில் 5 வயதில்தான் சேர்க்க முடியும். தனியார் பள்ளிகள் 3 வயதுக்குள் ளேயே சேர்த்து விடுகின்றன. அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி தொடங்கினால் ஆசிரியர் தேர்வு, பயிற்சி முறை, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பிரச்சனைகள் உள்ளன. இதுகுறித்தும், சட்டரீதியாகவும் ஆலோசித்து வருகிறோம் என செங்கோட்டையன் தெரிவித்தார்.