
அடுத்த 6 மாதங்களில் மடிக்கணிணி இயக்கத் தெரியவில்லை என்றால் பதவி பறிக்கப்படும் என்று நேபாள அமைச்சர்களுக்கு அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேபாளத்தில் கே.பி. சர்மா ஒளி, கடந்த பிப்ரவரி மாதம் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அந்த நாட்டில் அவர் பல அதிரடி திட்டங்களை அமல்படுத்தப்போவதாக கூறி வருகிறார்.
இதன் முதல் கட்டமாக இன்னும் 6 மாதங்களில் பிரதமர் அலுவலகம், கிரீன் சேனல் எனப்படும் காகிதம் பயன்படுத்தாத அலுவலகமாக மாறும் என்று அறிவித்து உள்ளார். இதையடுத்து எல்லாமே கணினி மயமாக்கப்படும் என்றும் கே.பி. சர்மா ஒளி தெரிவித்துள்ளார்..
அமைச்சரவைக் கூட்டங்கள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் என அனைத்துமே மடிக்கணினி மூலமாகவே விவாதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் மடிக்கணினியை இயக்குவது எப்படி என்பதை அமைச்சர்கள் , தங்கள் உதவியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு விட வேண்டும் என்று பிரதமர் கே.பி. சர்மா ஒளி அறிவுறுத்தி இருக்கிறார்.
அப்படி 6 மாதங்களுக்குள் அமைச்சர்கள் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களது பதவி பறிக்கப்படும் என்றும் சர்மா ஒளி வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.