அடுத்த 3 நாட்களுக்கு தகிக்கப் போகும் வெயில்…. வட மாவட்ட மக்களே  உஷார் !!

First Published May 31, 2018, 7:28 AM IST
Highlights
sun burning next 3 days in chenaai and north districts


சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று முதல்  3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை வழக்கத்தைவிட இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக தமிழகத்தின் தென்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்தமழை நேற்றுமுன்தினம் குறைந்து உள்ளது.

அதே நேரத்தில் கடந்த 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த அக்னி நட்சத்திரம் சமயத்தில்கூட வெயில் குறைநத அளவே காணப்பட்டது. சென்னையில் அக்னி நட்சத்திர காலத்தில் கூட வெயில் அளவு 100 டிகிரியை எட்டவில்லை.

ஆனால் அக்னி வெயில் முடிந்த மறுநாளே சென்னையில் வெயில் கடுமையாக இருந்தது. அதன் தாக்கம் இரவு 1 மணி வரை மின்விசிறி கூட வெப்பக் காற்றைத் தான் உமிழ்ந்தன. வெயிலின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் , தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மியான்மரை நோக்கி சென்று விட்டது. இதன் காரணமாக காற்றின் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது.

இதனால்  சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். இந்த நிலை அடுத்து 3 நாட்களுக்கு இருக்கும் என்று தெரிவித்தார்..

இந்நிலையில்  அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலு இழந்து அப்படியே மறைந்து விட்டது. இதனால் மழைக்கும வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி  உள்ளிட்ட மாவட்டங்களில் தென் மேற்கு பருவகாற்று வீசுகிறது.அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 5 செ.மீ.மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக அங்கு உள்ள வால்பாறையில் 3 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் பெரியாறில் 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று  தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் பாலசந்திரன் தெரிவித்தார்.

click me!