1986 ல் அதகளம் பண்ணிய ஸ்டாலின்... தாறுமாறாக போட்ட தேர்தல் வியூகம்! ஒரு ஃப்ளாஷ் பேக்...

By sathish kFirst Published Aug 19, 2018, 3:27 PM IST
Highlights

 திமுக தலைவர் கருணாநிதி சிறையில் இருந்த நேரத்தில், செயல் தலைவர் ஸ்டாலினின் தேர்தல் களப்பணி இன்றைய திமுகவினருக்கே தெரியாது. அப்படி ஒரு வியுகத்தை அமைத்து வெற்றி கண்டவர் தான் ஸ்டாலின். இதோ யாருக்கு தெரியாத ஒரு பதிவு

அது 1986... தமிழக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முதல் முறையாக எம் ஜி ஆர் படுதோல்வி அடைந்திருந்த நேரம்... முதல் முறையாக மாநிலம் தழுவிய தோல்வியை சந்தித்த எம் ஜி ஆர் அந்த தோல்வியை தாங்கிக்கொள்ள இயலாமல் சட்டநகல் எரிப்புப் போரில் தலைவர் கலைஞரை சிறையில் தள்ளி.... கைதிகளுக்கான சட்டை மற்றும் அரை டவுசரை போட வைத்து தன் மனதை தேற்றிக்கொண்டிருந்த நேரம்.

அப்பொழுது ஒரு வழக்கினால் தடைப் பட்டிருந்த மாயவரம் நகரமன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படுகிறது. கருணாநிதி  உள்ளிட்ட திமுகவின் பெருந்தலைகள் எல்லாம் சிறையில் அந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வெறியோடு எம்ஜிஆரின் ரத கஜ துரத பதாதிகள் எல்லாம் பண பலத்தோடும், அதிகார பலத்தோடும் களத்தில் இறங்குகின்றனர்.

அந்த மாயவரம் நகரமன்ற தலைவருக்கான இடைத்தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பேற்று ஒரு இளைஞர் தலைமையால் அனுப்பி வைக்கப்படுகின்றார். மிகவும் மெலிசான தேகம். வெள்ளைக் கலர் பேண்ட் சட்டை மாயவரம் பகுத்தறிவு மன்றத்தில். அதாவது திமுகழக நகர கழக அலுவலகத்தில் ஊழியர் கூட்டம். 

மாவட்டத்தின் முக்கிய பெருந்தலைகள் எல்லாம் கூடியிருக்கின்றார்கள். அந்த இளைஞரின் முன்னிலையில் அவரவர் தத்தமது தேர்தல் பராக்கிரமங்களை எல்லாம் அலட்சியமாக பட்டியலிட்டு விட்டு. இந்த இடைத்தேர்தலில் எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்று ஒவ்வொருத்தராக சொல்லி அமர்கின்றனர். இந்த நிகழ்வு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தைக் கடந்து செல்கிறது.

அந்த இளைஞரோ... அமைதியாக கையைக் கட்டி ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் கூர்ந்து கவனிக்கின்றார். மிகப்பெரும் பணக்கூட்டத்தை அதிகாரத்தோடு அனுப்பியிருக்கும் எம் ஜி ஆரின் படையை வெற்றிகொள்ள இந்த வியூகங்கள் எல்லாம் போதாது என்று கருதுகின்றார். சற்றே புதுமையாக, அதிரடியா, வேறு மாதிரியாக வியூகம் அமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

 சரி, நாளை கூடுவோம் என்று சொல்லிவிட்டு தன் தோழர்களோடு ஊர் சுற்றக் கிளம்பி விட்டார். அங்கே அவருக்கு அற்புதமான, இளந்தோழர்கள் உண்டு. மறுநாள் மீண்டும் ஊழியர் கூட்டம். அனைவரும் ஒருவித அசூயை அல்லது எரிச்சல் அல்லது அலட்சியத்தோடு வந்து அமர்கின்றார்கள்.

யாருக்காகவோ சிறிது நேரம் காத்திருக்கின்றார். கால் மணி நேரத்தில் அவரது தோழர்கள் வருகின்றார்கள். அவர்கள் பின்னே நடுத்தர வயதுடையவர்கள் 30 பேர். வெள்ளை வேட்டி சட்டையில் வருகின்றார்கள். ஊழியர் கூட்டத்திலிருந்து ஒரு மூத்த கட்சிக்காரர் எழுந்து. இது என்ன கட்சியின் ஊழியர் கூட்டத்திற்கு கட்சியில் உறுப்பினர் இல்லாதவர்களை அழைத்து வந்திருக்கின்றீர்கள் என்று அதட்டல் தொனியில் கேட்கிறார். 

அவர்கள் கட்சியின் உறுப்பினர் கார்டை வைத்திருக்கவில்லை தான். ஆனால் அவர்களால் ஒவ்வொரு வருடமும் சில நூறு இளைஞர்கள் திமுக உறுப்பினர்களாக மாறி வருகின்றனர். 

ஆம் இவர்கள் அனைவரும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பேராசிரியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணிபுரிந்து வரும் அதி தீவிர திமுக அனுதாபிகள். அவர்கள் பேச்சுக்களைக் கேட்டே பல்வேறு மாணவர்கள் திமுக உறுப்பினர்களாக மாறி வருகின்றனர்.அதெல்லாம் சரி இவர்களை எல்லாம் ஏன் இங்கே அழைத்து வந்தீர்கள்?!

இவர்கள் அனைவரும் இன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களும் அதாவது தேர்தல் வரை.  ஒவ்வொரு நாளும் நான்கு வார்டுகளுக்குச் செல்வார்கள். எந்த பிரச்சாரமும் செய்ய மாட்டார்கள். வரிசைக்கு மூன்று நபர்களாக பத்து வரிசையில் செல்வார்கள்.  இவர்களுக்குப் பின்னே நம் இளைஞரணி தோழர்கள் 50 பேர் மிக உயரமான கம்பங்களில் கட்டப்பட்ட பெரிய இரு வர்ணக்கொடியை தூக்கிப் பிடித்தவாரும்,  கருணாநிதி  சிறைக்குள் அரைக்கால் சட்டையுடன் இருக்கும் படம் வரைந்த பெரிய பதாகையை தூக்கிப் பிடித்தவாரும் அமைதியாக சுற்றி வருவார்கள்.

ஒவ்வொரு வார்டிலும் ஒரு சிறு சந்தைக் கூட விட்டுவிடாமல் நுழைந்து வருவார்கள். எந்த வாய்மொழி கோஷங்களோ, நோட்டீஸ் விநியோகமோ எதுவும் இருக்காது. அவ்வளவு தான்!

அவர்களை அனுப்பி வைத்து விட்டு. மீண்டும் கட்சி பொறுப்பாளர்களிடம் பேசுகிறார். எனக்கு பத்து டிவியும். பத்து வி சி ஆரும் வேண்டும். சில பிரச்சாரப் படங்களை எடுத்து வந்துள்ளேன். அவற்றை ஒவ்வொரு வார்டிலும் தினம் தினம் 5 இடங்களில் போட்டு மக்களைக் கூட்ட வேண்டும். 

கருணாநிதியின் பாலைவனச் சோலை உள்ளிட்ட படங்களைப் போட்டுக்காட்டி இடையிடையே இந்த விளம்பரங்களையும் ஓட விட வேண்டும் என்கிறார்! கூட்டத்திலிருந்து பத்து டிவி, வி சி ஆருக்கெல்லாம் எங்கங்க போறது.  பத்து வருஷமா ஆட்சியிலயே இல்லாம ஆறு தேர்தலை பார்த்தாச்சி.... என்று அங்கலாய்ப்புக் குரல் எழ ஆரம்பித்தவுடன். 

மேசையை ஓங்கி தட்டிவிட்டு  வீறுகொண்டு எழுந்து நிற்கின்றார். சில பேரை பார்த்தவாறே.... சுட்டிக்காட்டியவாறே. ஆட்சியிலிருந்த போது சம்பாதிக்கவே இல்லண்ணு சொல்லுங்க?! அந்த காசு அத்தனையும்  கட்சிக்கு அழிச்சிட்டீங்களா என்ன?! எனக்கு இன்று மாலைக்குள் பத்து டிவி விசிஆர் வந்தாக வேண்டும்!

 எந்தெந்த வார்டில் எந்தெந்த இடத்தில் அதை ஒளிபரப்ப வேண்டும் என்று இதோ லிஸ்ட் தயாரித்து விட்டேன்! இன்று மாலை முதல் இது ஆரம்பமாக வேண்டும்.  

அதற்கு யார் யார் பொறுப்பாளர்கள் என்று இதோ பட்டியல் இருக்கின்றது. இதன் படி செய்யுங்கள்! அவ்ளோ தான் கிளம்பி விட்டார்! அடுத்த பத்து நாட்களும் அந்த படித்தவர்களின் அமைதிப் பேரணியும். இந்த டீவி பிரச்சாரமும் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கான பெரும் தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறது. தேர்தல் நடக்கிறது. செங்குட்டுவன் அமோகமாக வெற்றி பெற்று மாயவரம் நகராட்சித் தந்தையாக பொறுப்பேற்கிறார்! 

ஆம்.... அந்த இளைஞர் யாருன்னு சொல்லவே இல்லையே. சாட்சாத் செயல் தலைவர்  முக ஸ்டாலினே தான் அவர்!
ஆம், அவரது தேர்தல் வியூகத்தை சிறுவனாக இருக்கும் பொழுதே கண்டும், கேட்டும் களித்தவர்.

 அந்த இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவரது தேர்தல் பிரச்சார வியூகம் வெகுவாக அனைவராலும் பாராட்டப்பட்டது. அவரை அலட்சியமாக எண்ணியவர்கள் கூட அதன் பிறகு அவரிடம் பெருமதிப்புக் கொண்டு தலைவராக ஏற்றுக்கொண்டது தனிக்கதை!

 வாருங்கள் தளபதியாரே. மீண்டும் எங்கள் அந்த அதிரடியான பழைய தளபதியாக காட்சி தாருங்கள்..! உங்களின் சொந்த வியூகம் மட்டுமே நேர்மையான வழியிலும் கழகத்திற்கு பெரு வெற்றியை ஈட்டித்தர முடியும்! என  தொண்டர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

click me!