
சமீபத்தில்தான் நமது ’ஏஸியாநெட் தமிழ்’ இணையதளத்தில் எழுதியிருந்தோம் ’தமிழக கவர்னர் ஏதோ ஒரு முடிவில்தான் இருக்கிறார். இந்த ஆட்சி கலைக்கப்பட்டால் கூட மாநில நிர்வாகத்தை நடத்துவதற்கு தான் தயார்! என்று பிரதமரிடமே சொல்லிவிட்டாரென கூறப்படுகிறது.’ எனும் தகவலை வெளியிட்டிருந்தோம்.
தமிழக அரசின் நிர்வாக நடவடிக்கைகளை பல மாவட்ட ஆய்வுகளின் மூலம் ஸ்கேன் செய்திருக்கும் கவர்னர், அரசுக்குள் நடக்கும் லஞ்ச லாவண்ய விஷயங்களை அறிந்து கொள்ள நேர்மையான அதிகாரிகளை ரகசிய உளவாளிகளாக அமர்த்தியிருக்கிறார் எனும் கருத்தை தொட்டு அந்த செய்திகள் வெளியாகி இருந்தது.
ஆக! மாநில நிர்வாகத்தின் முதன்மை நிர்வாகி! என்ற அளவில் இந்த அட்சி மீது சாட்டை சுழற்ற கவர்னர் துவங்குவார்...என எதிர்பார்த்திருந்த நிலையில், ஊழலுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பேசி அவர்களை வெளிப்படையாகவே உசுப்பிவிட கவர்னர் துவங்கியிருப்பது அ.தி.மு.க. அரசை உண்மையிலேயே ஆட வைத்திருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலையின், கிண்டி எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களின் சார்பில் வரும் குருஷேத்ரா தொழில்நுட்ப விழாவின் துவக்க நாள் நிகழ்வில்தான் இப்படி மாணவர் புரட்சியை உசுப்பியிருக்கிறார் கவர்னர் என்கிறார்கள்.
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையை அடிக்கோடிட்டுக் காட்டும் விமர்சகர்கள் “இந்த விழாவில் பேசத்துவங்கிய கவர்னர் முதலில் மாணவர்களுக்கு பொதுவான அறிவுரைகளை வழங்கி வந்தார். அதன் பிறகு தனது ரூட்டை மாற்றியவர் ஊழலுக்கு எதிராக மாணவர்கள் அமைதி காத்திட கூடாது என்றார். இதுபற்றி பேசிய கவர்னர் ‘ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ளும் நாள் முதல் அதைப்பற்றி பேச வேண்டும் என மார்ட்டின் லூதர் கிங் கூறியிருக்கிறார்.
ஒரு உண்மையை பார்த்து மவுனமாக இருப்பது, ஏமாற்றுவதற்குச் சமம். எனவே லஞ்ச ஊழலை பார்த்து மாணவர்கள் அமைதியாக இருக்கக்கூடாது. ஊழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும்.’ என்று பேசினார்.
கவர்னர் பேசிய இந்த பேச்சு ஆளும் அரசுக்கு எதிரான அவரது ஒரு மூவ்!வாகவே பார்க்கப்படுகிறது. நடக்கும் ஆட்சியில் பல மட்டங்களிலும் ஊழல் மலிந்துள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில் கவர்னரும் அவர்களைப் போலவே பேசியுள்ளது அரசை அதிர வைத்துள்ளது. அதுவும் இதே விழா மேடையில் அரசின் ஒரு முக்கிய அங்கமான, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் அமர்ந்திருந்தார் என்பதை கவனிக்க வேண்டும்.
கவர்னரின் உரையை கேள்விப்பட்ட சீனியர் மந்திரிகள் சிலர் ‘இத்தனை நாளும் நம் முதல்வருக்கும் மேலதிகாரி போல் கவர்னர் நடந்தார். கண்டும் காணாமலும் இருந்துவிட்டோம். ஆனால் இப்போது என்னவோ எதிர்கட்சிக்காரர் போல் பேசுகிறார். என்னதான் அவர் தமிழக அரசானது ஊழல் அரசு, அதற்கு எதிராக போராடுங்கள் என்றெல்லாம் கூறாவிட்டாலும் கூட மீடியாக்களும், பத்திரிக்கைகளும் அவரது பேச்சை இப்படித்தானே மொழி பெயர்ப்பார்கள்! கவர்னரின் இந்த வார்த்தைகள் நிச்சயம் நம் அரசை காயப்படுத்தும் வகையில்தான் இருக்கிறது.’ என்று கொந்தளித்திருக்கிறார்கள்.
கவர்னர் பேச்சின் மீதான அமைச்சர்களின் இந்த அதிருப்தி, சில தூதுவர்கள் மூலமாக பி.ஜே.பி. முக்கியஸ்தர்களிடம் பகிரப்பட்டது. ‘நாங்கதான் கவர்னர் என்ன ஆய்வு செய்தாலும் கண்டுக்கலையே. பின்னே ஏன் எங்களுக்கு சேதாரம் விளையுற மாதிரி பேசுறார்?’ என்று கேட்டார்களாம்.
அதற்கு பி.ஜே.பி. தரப்பிலிருந்து சட்டென வந்து விழுந்த பதில்...’இதற்கெல்லாம் காரணம் உங்கள் துணை முதலமைச்சர்தான். கடந்த சில நாட்களாகவே அவரது பேச்சு மத்திய அரசையும், எங்களையும் (பி.ஜே.பி.)யையும் காயப்படுத்தும் தொனியிலேயே இருக்கிறது.
தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது! என்கிறார், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக மத்திய அரசு வரிகளை போட்டால் அதை எதிர்ப்போம்! என்கிறார். என்னாச்சு பன்னீர் செல்வத்துக்கு? உரிமைகளை பேசட்டும் தப்பில்லை. ஆனால் அதற்காக தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று சொல்வது இங்கே தடம் பதிக்க முயலும் எங்களை நேரடியாக தாக்கும் செயல்தானே! பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி ஆட்சியை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தும்போது பாதுகாப்பு தர நாங்கள் வேண்டும், எடப்பாடியோடு இணையும் போது கைபிடித்து கோர்த்து வைக்க நாங்கள் வேண்டும், அவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுங்கள்! என்று சிபாரிசு செய்ய நாங்கள் வேண்டும். ஆனால் எல்லா வேலையும் முடிந்து செட்டிலான பின் எங்களை கழட்டி விடுவது போல் விமர்சிப்பது என்ன தர்மம்?
பன்னீரின் தேவையற்ற விமர்சனங்களின் விளைவே கவர்னரின் இந்த தீ உரைகள். இது இன்னும் தொடரும் வாய்ப்பிருக்கிறது. தமிழக கவர்னர் ஒன்றும் சாதாரண நபரில்லை. ஒரு சின்ன கண்ணசைவு மேலிருந்து கிடைத்தாலும் போதும் சட்டப்பூர்வமாக ஆட்சியை கையிலெடுத்துவிடுவார், தெரிந்து கொள்ளுங்கள். அதையும் சட்டப்பூர்வமாக மட்டுமே செய்யும் நேர்மையாளி அவர்.
நீங்களென்ன பெரும்பான்மை உறுப்பினர்களோடா ஆட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் ஆட்சிக்கு மூடுவிழா நடத்த சட்டப்பூர்வமான ஒரு கையெழுத்தே போதும்.’ என்று பொரிந்து தள்ளியிருக்கிறார்கள்.இதைக் கேட்டு அமைச்சரவை கப்சிப் என்றாகிவிட்டது.
இதன் பிறகு முதல்வர் உள்ளிட முக்கிய அமைச்சர்கள் பன்னீர்செல்வத்திடம் ‘இனி மத்தியமைச்சரவையை விமர்சித்து வீண் வம்பை இழுத்துக் கொள்ள வேண்டாம்.’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.” என்று முடிக்கின்றனர்.
கவர்னரின் ஒரு சின்ன சீறலுக்கே இவ்வளவு பெரிய பக்கவிளைவா!?