
எந்த தவறுக்கும் மரண தண்டனை சரியான தீர்வாகாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பு ஒவ்வொரு முறையும் கேள்விக்குறியாகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. பெண் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மரண தண்டனைக்கு எதிரான கருத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில், தலைநகர் டெல்லியில் 8 மாத பெண் குழந்தை ஒன்றை உறவினரான இளைஞர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் குழந்தை சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில், குழந்தைகளின் மீதான பாலியல் தாக்குதல்களை பிரிவுபடுத்தி அதற்கேற்ற தண்டனைகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. எனவே தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் அரசு முரண்படுகிறது. எந்தவிதமான தவறுக்கும் மரண தண்டனை தீர்வாகாது என மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா வாதிட்டார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவரும் நிலையில், 8 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு மரண தண்டனை கூடாது என்ற வாதத்தை அரசு முன்வைத்துள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட மாட்டாது என அரசு மறைமுகமாக தெரிவிப்பதாக அரசியல் விமர்சகர்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.