இரட்டை தலைமை எங்களுக்குப் பழகி போச்சு.. இது மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பஞ்ச்..!

By Asianet TamilFirst Published Sep 27, 2021, 9:59 PM IST
Highlights

கட்சிக்கு இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதே உள்ளூர் பிரச்னையை மையமாக வைத்து நடப்பதுதான். கட்சிகள் என்னதான் கூட்டணி அமைத்தாலும், தலைவர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டாலும், அதையும் தாண்டி உள்ளூரில் சில வேட்பாளர்கள் போட்டியிடுவது இயற்கைதான். அதைத் தவிர்க்க முடியாது. எதிர்கட்சித் தலைவரின் ஆலோசனைபடி போட்டி வேட்பாளர்களை அழைத்து பேசி, சரி செய்யப்பட்டு விட்டது.
திமுக 4 மாதங்களில் வழங்கிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமை அடித்துக்கொள்கிறது. ஆனால், முக்கிய தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு கானல் நீராகிவிட்டது. கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடியில் சட்டத்திட்டங்களை புகுத்தி, குறைந்த எண்ணிக்கையில் பயனடையும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். சட்டப்பேரவையிலும் இணைந்துதான் பணியாற்றுகிறார்கள்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்ததால், அவர் சட்டப்பேரவையில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது. இதனால் தொய்வு ஏற்படக் கூடாது என இணை ஒருங்கிணைப்பாளர் முதற்கட்டமாக 9 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அங்கிருந்தபடியே எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறார். இரண்டு பேருமே ஒருமித்த கருத்துடன்தான் உள்ளனர்.
கட்சிக்கு இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்த்தோம். அதிலெல்லாம் ஒருமித்த கருத்துடன் வேட்பாளர்களை அறிவித்தார்கள். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. எனவே, அதை வைத்து எந்தப் பிரச்னையும் கட்சிக்குள் எழ வாய்ப்பில்லை” என கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

click me!