உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாவும் நியாயமாகவும் நடக்கணும்னா இதுதான் ஒரே வழி.. டாக்டர் கிருஷ்ணாசாமியின் ஐடியா.!

By Asianet TamilFirst Published Sep 27, 2021, 9:37 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என்றால் அமைச்சர்கள் தங்களது முகாம்களை கலைத்து விட்டு, சென்னைக்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் கிருஷ்ணாசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “த‌மிழக‌த்தில் சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் வா‌க்காள‌ர்களுக்கு பணம் அளித்தே வாக்குகளை வாங்குகிறார்கள். இப்போது நடைபெறும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பட்டப் பகலிலேயே பணப் பட்டுவாடா செய்யப்படுகிறது. பதவிகள் பகிரங்கமாக ஏலம் விடப்படுகின்றன. இதையெல்லாம் தமிழக தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், அதற்கான வலிமை தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா என்பதுதான் கேள்விக்குறி.
அமைச்சர்கள் தங்களது பணிகளை எல்லாம் விட்டுவிட்டு உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச் சேகரிக்க மாவ‌ட்ட‌ங்களில் முகாமிட்டிருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது ஜனநாயகம் இல்லை என்பதை இது காட்டுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என்றால் அமைச்சர்கள் தங்களது முகாம்களை கலைத்து விட்டு, சென்னைக்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும். எங்கள் கட்சிக்கு எவ்வளவு போராடியும் தனி சின்னம் ஒதுக்கப்படவில்லை. என்றாலும் தென்காசி,  திருநெல்வேலி பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அதிக  வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். அக்டோபர் 1 முதல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
 

click me!