#BREAKING விஜயதசமியன்று கோயில்களை திறக்கப்படுமா? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன?

By vinoth kumarFirst Published Oct 12, 2021, 4:14 PM IST
Highlights

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிப்பட வேண்டிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன்  நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

விஜயதசமி அன்று கோவில்கள் திறப்பு தொடர்பாக அரசே முடிவெடுத்துக்கொள்ளட்டும் . இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கோவையை சேர்ந்தவர் ஆர்.பொன்னுசாமி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்;- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதும், ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. ஆனால், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும், வருகிற 15-ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது. 

அன்று தமிழக அரசு உத்தரவின்படி கோவில் திறக்காது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை திறக்க அரசு அனுமதிக்கிறது. ஆனால், துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அரசு பிடிவாதமாக செயல்படுகிறது. எனவே, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களைத் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதனால்,  நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அடங்கிய விடுமுறைகால அமர்வில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்தார். விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மத்திய அரசு வழிகாட்டு விதிகளை அறிவித்துள்ளது எனவும், இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து, விஜயதசமி அன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என பிற்பகல் 1:30 மணிக்கு விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டு வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். 

இதனையடுத்து, மீண்டும் பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிப்பட வேண்டிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன்  நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. இதனை ஏற்றுகொண்ட நீதிமன்றம், விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும் என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

click me!