கொடுத்தார்கள் வென்றார்கள் என்று சொல்லும் வகையில் களப்பணி அமையட்டும்.. வன்னியர்களுக்கு ராமதாஸ் கட்டளை.

By Ezhilarasan BabuFirst Published Feb 27, 2021, 4:20 PM IST
Highlights

இது குறித்து தெரிவித்துள்ள அவர் 40 ஆண்டுகால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி.. ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்.. வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்த முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமிக்கு நன்றி.  

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார்கள் அதனால் வென்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களும் களப்பணி ஆற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக நிறைவேற்றியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக அச்சமூக அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக இக்கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு மூன்றாக பிரித்து உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பிலுள்ள வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடும், சீர்மரபினர்க்கு 7 சதவீத உள் ஒதுக்கீடும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5 சதவீத ஒதுக்கீடும் பங்கிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆறு மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பு வன்னியர் சமூக மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வந்தார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆனந்த கண்ணீரில் மிதந்து வருகிறார். 

இது குறித்து தெரிவித்துள்ள அவர் 40 ஆண்டுகால கனவு நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி.. ஆனந்த கண்ணீரில் நனைகிறேன்.. வன்னியர்களுக்கு 10.50 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்த முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமிக்கு நன்றி. என நீண்ட நெடிய அறிக்கை வெளியிட்டு தன் உள்ளத்து உவகையை பகிர்ந்துள்ளார். அதேபோல அன்புமணி ராமதாசும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளார். இந்த அறிவிப்பு வந்தவுடன் தனது தந்தை ராமதாசுடன் அவர் தொலைபேசியில் ஆனந்த கண்ணீர் வடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அளவுக்கு பாமாகவினரை இந்த அறிவிப்பு குளிர வைத்துள்ளது. இந்நிலையில்  எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலை  அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக சந்திக்க உள்ளது. 

அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நேரத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற வகையில் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி பங்கீட்டில் சாதகமான முடிவு  கிடைத்துள்ளதால், பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அதன் வெளிபாடாக அவர், வன்னிய மக்களுக்கு வேண்டுகோள் அல்ல கட்டளை விடுக்கும் வகையில் டுவிட்டரில் கருத்து என்று பதிவிட்டுள்ளார்.  அதில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தார்கள் அதனால் மீண்டும் (அதிமுக) ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார். 

 

click me!