BJP: யாரும் பாஜகவை குறைத்து மதிப்பிட வேண்டாம்.. நகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியை அலறவிடுவோம்.. வி.பி.துரைசாமி.!

By vinoth kumarFirst Published Dec 6, 2021, 8:50 AM IST
Highlights

தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, ஆளுங்கட்சி சொல்வதை கேட்கும் அதிகாரிகளையே நியமிப்பர். அவர்கள் தான், தோல்வி அடைந்த ஆளுங்கட்சியினரையும் வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பர். அடக்குமுறையை எதிர்க்கிற சக்தி பாஜகவுக்கு மட்டும் தான் உண்டு. 

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிடும். இதில், பெரும்பான்மையான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான அக்கட்சியின் வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தலைமை தாங்கினார். இதில், முக்கிய நிர்வாகிகளான சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ், எம்.என்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனையடுத்து, கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  வி.பி.துரைசாமி;- விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிடும். இதில், பெரும்பான்மையான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அதற்கு ஏற்ற வகையில் பாஜக கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. 

தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, ஆளுங்கட்சி சொல்வதை கேட்கும் அதிகாரிகளையே நியமிப்பர். அவர்கள் தான், தோல்வி அடைந்த ஆளுங்கட்சியினரையும் வெற்றி பெற்றவர்களாக அறிவிப்பர். அடக்குமுறையை எதிர்க்கிற சக்தி பாஜகவுக்கு மட்டும் தான் உண்டு. யாரும் பாஜகவை குறைத்து மதிப்பிட வேண்டாம். முறைகேடு செய்வதை திமுக  நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அந்த வகையில் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் வகையில் வியூகம் வகுத்து தீவிரமாக களம் இறங்கி உள்ளோம்.

இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பாஜக கட்சியினர் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெறுவார்கள். சென்னையில் மழை நீர் தேங்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட எந்த தேர்தல் வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. இவற்றை மக்களிடம் தெரிவித்து ஓட்டு கேட்போம். பாஜக பக்கம் மக்கள் உள்ளனர் என கூறியுள்ளார். 

click me!