ADMK : “போட்டியின்றி தேர்வாகும் ஓபிஎஸ் - இபிஎஸ்..” இரட்டை தலைமையை உறுதி செய்த அதிமுக..!

By Raghupati RFirst Published Dec 6, 2021, 8:33 AM IST
Highlights

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாகின்றனர். 

அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞர் கருணாநிதி முதல்வர் ஆக பொறுப்பேற்றார். இதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். பிறகு கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே, கட்சியில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 1972 இல் அஇஅதிமுக கட்சியை தொடங்கினார்.பின்னர் தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் வென்று இமாலய சாதனையை படைத்தார். அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை எம்ஜிஆரே ஏற்றார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் பெரும்பாலும் கட்சியும், ஆட்சியும் இரு வேறு தலைவர்களிடமே இருந்தது. கட்சித் தலைமை வேறொருவரிடம் இருந்தாலும் எம்ஜிஆரை மீறி எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையே இருந்தது.

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிளவுபட்டு 1989 தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தல்முடிவுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்தது. அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வானார். 1991 பேரவைத் தேர்தலில் வென்று முதல்வரான ஜெயலலிதா,  மறையும் வரை அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார்.

ஜெயலலிதா மறைந்ததும்  ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முதல்வர் பதவி கிடைத்தது. ஆனால், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சில வாரங்களிலேயே சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட, அவருக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார். முதல்வராக பதவியேற்க ஆளுநரின் அழைப்புக்காக காத்திருந்த சசிகலா, சொத்து வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். 

ஓபிஎஸ் தலைமையில் தனி அணி செயல்பட்டதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 2017 ஆகஸ்ட்டில் பழனிசாமி, ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. அதன்பிறகு அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டு முதல்முறையாக இரட்டைத் தலைமையில் கட்சிஇயங்கியது. இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது. இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதிநடைபெற்ற அதிமுக செயற்குழுவில், ‘பொதுச் செயலாளர் பதவிக்குபதிலாக இனி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கும். பொதுச் செயலாளரை போல இப்பதவிகளுக்கும் அதிமுக தொண்டர்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். 

டிச.7-ம் தேதி தேர்தல் நடக்கும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமியும் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதனால், இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகதலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்புமனுக்களை நேற்று பரிசீலனை செய்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தலைமை அலுவலகத்துக்கு வரவில்லை. வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகு முடிவு அறிவிக்கப்படும் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அதிமுகவின் அதிகாரம் மிக்க இரட்டைத் தலைவர்களாக ஓபிஎஸ் - இபிஎஸ் தேர்வாகின்றனர். தமிழகத்தை அதிக ஆண்டுகள், அதாவது 30ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியாக, இப்போதும் 65 எம்எல்ஏக்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகவும், இரட்டைத் தலைமையையும்  உறுதி செய்திருக்கிறது அதிமுக.

click me!