யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.. கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.. ஸ்டாலின் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Aug 14, 2021, 1:00 PM IST
Highlights

இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம், திமுக தேர்தல் நேரத்தில் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றிக் காட்டுவோம்.

திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் நமக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளார். தமிழக அரசின் 2021-2022 ஆண் ஆண்டிற்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது, இன்று விவசாயத்துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:- 

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன், திமுக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகியுள்ள நிலையில், திமுக அரசின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனக்கும் அந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கொரோனா என்ற நெருக்கடியான காலத்தில் நாம் ஆட்சி பொறுப்பேற்றோம், அதில் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதையே இந்த அரசின் கடந்த 100 நாட்களிட்  சாதனையாக நான் கருதுகிறேன். 

மருத்துவமனைகள் இல்லை, படுக்கை வசதிகள் இல்லை, ஆக்சிஜன் வசதி இல்லை என அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தன, ஆனால் அதை அனைத்தையும்  கடந்து நாம் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளோம். இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம், திமுக தேர்தல் நேரத்தில் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றிக் காட்டுவோம். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம். நான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நெஞ்சில் ஆழமாக உள்ளது. கடந்த 100 நாட்களில் இந்த அரசு செய்த சாதனைகளை ஒரு பட்டியல் போட்டால் உள்ளபடியே அதை சொல்லி முடிக்க மூன்று மணி நேரம் ஆகும். இதைவிட தமிழகத்தின் நிதிநிலைமை குறித்துதான் எனக்கு மிகுந்த கவலையாக உள்ளது. ஆனால் அதுவும் விரைவில்  சீர் செய்யப்படும். 

கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவரது மகனாகிய நான் நிச்சயம் செய்வேன். இந்த நூறு நாளில் திமுக செய்த சாதனையை தொடர்ந்து மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். தற்போதுள்ள அரசு ஒருபோதும் நான் எனது அரசு என்று சொல்ல மாட்டேன், இது நமது அரசு என்றுதான் நான் சொல்லுவேன். அமைச்சர்களே நீங்கள் பட்ஜெட்டை வாசித்து முடித்து விட்டீர்கள், ஆனால் எனக்கு அடுத்து வரும் நாட்களை பற்றியே சிந்தனையாக இருக்கிறது, ஒவ்வொரு நொடியும் மக்களுக்காகவே சிந்திக்கிறேன். இழந்த பெருமைகளை மீட்டெடுக்க நம்மால் முடியும் என்ற நம்பிக்கை கடந்த 100 நாட்களில் ஏற்பட்டுள்ளது.  திமுக மீது மக்களின் நம்பிக்கை எப்போதும் நிலைத்து இருக்க விரும்புகிறேன், திமுகவை வாழ்த்த மணம் இல்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த நூறு நாட்கள் பணி அமையும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

click me!