வாத்தியாரையும், பள்ளிக்கூடத்தையும் மாணவர்கள் மறக்கணும்.. கல்வி தொலைக்காட்சியை கலர்ஃபுல்லா மாற்ற லியோனி ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 5:57 PM IST
Highlights

மாணவர்கள் பள்ளிக்கூடங்களையும் ஆசிரியர்களையும் மறந்து போகும் அளவிற்கு கல்வி தொலைக்காட்சி சிறப்பாக செயல்படுவதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கள் லியோனி தெரிவித்துள்ளார். 

மாணவர்கள் பள்ளிக்கூடங்களையும் ஆசிரியர்களையும் மறந்து போகும் அளவிற்கு கல்வி தொலைக்காட்சி சிறப்பாக செயல்படுவதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கள் லியோனி தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வைக்கு பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்ததன் எதிரொலியாக தமிழ்நாட்டில் 50 நூலகங்களுக்கு 2 லட்சம் புத்தகங்கள் கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 

பாட நூல் கழகத்தில் குழந்தை இலக்கியத்தை எளிமைப்படுத்தும் விதமாக குழந்தை இலக்கிய படைப்பாளிகள் கொண்டு படக்கதைகள் மூலம் வாழ்க்கை கல்வி அறிவுபூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும் நூல்களை உருவாக்கி நூலகங்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக வழங்க 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதே போல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நாட்டுடமையாக்கப்பட்ட 57 நூல்களை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாட நூல் கழகத்தின் மொழி பெயர்புத்துறையின் மூலம் சிறந்த நூல்கள் மொழிபெயர்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும், அந்த வகையில் சிலப்பதிகாரம்- ஆங்கிலம் மொழியிலும், சமஸ் எழுதிய அண்ணா மாபெரும் தமிழ் கனவு ஆங்கிலத்திலும், எஸ்.ரா எழுதிய கதா விலாசம் ஆங்கிலத்திலும்,

பொன்னியின் செல்வன் மலையாளத்திலும், journey of civilization இந்தியிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாக கூறினார். கல்வி தொலைக்காட்சி செயல்பாடுகளை ஆய்வு செய்தது குறித்து பேசிய அவர், ஆசிரியர்களின் முகங்கள், பள்ளிக்கூடங்களை மறந்துவிடும் அளவுக்கு கல்வி தொலைக்காட்சி சிறப்பாக செயல்படுவதாகவும், நானும் வாரத்தில் ஒரு நாள் பாடம் எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கல்வி தொலைக்காட்சியை மாணவர்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் பார்க்க, எளிமையாக கலைநயத்துடன் பாடங்கள் எடுக்க மேலும் புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

click me!