யாரோ முகம் தெரியாத குடிமக்களிடம் வசூலிக்கிறோம்... உண்மையை ஒப்புக்கொள்ளும் போலீஸாரின் அவலநிலை..!

By Thiraviaraj RMFirst Published Jul 28, 2021, 4:58 PM IST
Highlights

ஊரிலுள்ள அனைத்து குற்றவாளிகளின் மனித உரிமை மெச்ச பாதுகாக்கப்படுகிறது. ஆனால், காவல்துறையினரின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. 

காவல்துறையில் காவல்நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பல துன்பங்களை கடந்தே கடமையாற்றி வருவதாகவும், அதனை சரிசெய்ய உயரதிகாரிகளும், அரசும், மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதியரசர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் முன்வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து அவர்கூறுகையில், ‘’ஊரிலுள்ள அனைத்து குற்றவாளிகளின் மனித உரிமை மெச்ச பாதுகாக்கப்படுகிறது. ஆனால், காவல்துறையினரின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இன்னும் சில அறிக்கைகளை வெளியிட சொல்லி ஆணையிட்டால் அது காவல்துறையினருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் நிலையத்தில் தினசரி உபயோகப் படுத்தும் பொருட்கள் அனைத்துமே யாரோ முகம் தெரியாத ஒரு குடிமகனிடம் வசூலிக்கப்படுகிறது. அதை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு அவர்களது பொறுப்பிற்கு ஏற்ப காவல்நிலையத்தில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும்.

காவல் நிலையத்தை சுத்தமான பகுதியாக வைத்துக்கொள்ள அவ்வப்போது உயர் அதிகாரிகள் ஆனை விடுகின்றனர். ஆனால், அரசாங்கம் அமர்த்திய துப்புரவு பணியாளர் என்ற ஒருவர் பல காவல் நிலையங்களில் கிடையாது. மேலே சொன்னது போல யாரோ முகம் தெரியாத ஒரு குடிமகனிடம் இருந்து வசூலிக்கப்பட்டு தான் காவல் நிலையத்தை தினந்தோறும் சுத்தம் செய்யும் பணியை செய்ய ஒருவரை பணியமர்த்தி காவல் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே காவல் நிலையங்களுக்கு ஒரு தூய்மை பணியாளர் பணியமர்த்த தாங்கள் உத்தரவிட வேண்டும்.

காவல் நிலையத்தில் ஆய்வாளர் முதல் ஆளிநர்கள் வரை பயன்படுத்தும் வாகனங்கள் 15ஆண்டுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றை சீர் செய்வதற்கு முகம் தெரியாத நபரிடம் பிச்சை எடுத்து சீர் செய்து கொண்டிருக்கின்றனர். ஆகவே அதை குறிப்பிட்ட கால அளவில் புதுப்பிக்கவும் சீர் செய்யவும் தாங்கள் உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் குறைந்தது நான்கு புறக்காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றை கட்டுவதற்கு அரசு எவ்வளவு பணம் கொடுத்தது என்பதை கேளுங்கள். ஒவ்வொன்றும் உதவி ஆய்வாளர் முதல் ஆய்வாளர் வரை சாமானியர்களிடம் வசூல் செய்து கட்டியதே அதை தடுத்து நிறுத்த உத்தரவிடுங்கள்.
 
சென்னை மாநகரில் லட்சக்கணக்கில் மூன்றாவது கண் (சிசிடிவி கேமரா) நிறுவியதாக மார்தட்டிக்கொள்ளும் அதிகாரிகளிடம் அவற்றுக்கு யார் பணம் வழங்கியது என்று தாங்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக காவலன் முதல் உதவி ஆணையாளர் வரை எவ்வளவு பாடுபட்டு யார் யாரிடம் கெஞ்சி அதை நிறுவினார்கள் என்பதை கேட்டு அதைத் தடுப்பதற்கு அரசு இவ்வாறான செயல்களுக்கு நிதி ஒதுக்கும்படி நல்ல உத்தரவு கொடுங்கள்.
 
காவலர்கள் தங்களது பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் வேலையில் காவலர்களுக்கு கிடைக்க வேண்டிய முறையான ஊதிய பிரதிபலன்கள் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். தனக்கு வர வேண்டிய ஊதிய பலன்கள் வராதபோது அதைக் கேட்பதற்கு சில நேரங்களில் 50 முதல் 60 கிலோ மீட்டர்கள் தனது சொந்த வாகனத்தில் பயணம் செய்து மாவட்ட மற்றும் மாநகர காவல் தலைமையகம் சென்றால், அங்கே ’காவலன் வணக்கம் சரியாக வைக்கவில்லை’. ’காவலன் நேராக நின்று பேசவில்லை’ என்றெல்லாம் குறை கண்டுபிடிக்கும் அமைச்சு பணியாளர்கள் காவலர்களின் முறையான ஊதிய பலன்களை மட்டும் குறையாகவே வைத்துள்ளனர். அதை எவ்வளவு பெரிய அதிகாரியிடம் முறையிட்டாலும் அமைச்சு பணியாளர்கள் விரும்பிய நேரத்திலேயே அதை செய்து முடிக்கின்றனர். எனவே காவலர்களின் ஊதிய பலன்களை காலம் தாழ்த்தி வழங்கும் அமைச்சுப் பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க தாங்கள் அரசுக்கு உத்தரவிடுங்கள்.

நாள்தோறும் நடைபெறும் சாலை மறியல், அனுமதியில்லாமல் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் என கைது செய்து மொத்தமாக பாதுகாப்பாக வைத்திருக்க ஒவ்வொரு காவல் நிலைய பகுதியில் இருக்கும் திருமண மண்டபங்களில் காவல்துறையினர் கெஞ்சிகின்றனர். இதை தடுத்து நிறுத்த அரசு அவர்களுக்கு முறையான நிதி ஒதுக்கினால் வாடகை கொடுத்து அவர்களை தங்க வைக்கலாம் அதற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்.

குற்ற வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் போராட்ட நேரங்களில் கைது செய்யப்படும் போராட்டக்காரர்களுக்கும் உணவளிக்க காவல்துறையினர் யாரோ ஒரு உணவக முதலாளியை இருகரம் கூப்பி வேண்டி நாங்கள் கைது செய்திருக்கும் போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கும்படி கேட்கின்றனர். ஏனென்றால், அரசு நிதி ஒதுக்குவது கிடையாது. இவ்வாறான விஷயங்களுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் என தாங்கள் உத்தரவிடுங்கள்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வழக்குகளை நீதிமன்றத்தில் கையாளுவதற்கு கோர்ட் ஆர்டர்லி எனப்படும் நீதிமன்றத்தில் வழக்குகளை பராமரிக்கும் காவலர்கள் உள்ளார்கள். அவர்களை கொஞ்சம் கூட மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல் மரியாதை இல்லாமல் கேவலமாக நடத்தும் நீதிபதிகளை மரியாதையுடன் நடந்து கொள்ள தாங்கள் உத்தரவிட வேண்டும். கோர்ட் ஆர்டர்லியாக இருக்கும் காவலர்களை பெரும்பாலும் தங்கள் வீட்டில் வாகன ஓட்டுநராக உபயோகப்படுத்தும் மற்றும் காய்கறி வாங்குவதற்கு பயன்படுத்தும் நீதிபதிகளை சட்டப்பூர்வமான வேலைகளை தவிர மற்ற வேளைகளில்  ஈடுபடுத்த கூடாது என தாங்கள் உத்தரவிட வேண்டும்.

சாத்தான்குளத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கின் தொடர்பாக நீதிபதி ஒருவர் ஒரு பெண் காவலரை தன் காலடியில் அமர வைத்து மிரட்டி சாட்சியம் சொல்ல வைத்துக் கொண்டிருந்தது வீடியோவாக வெளியே வந்தது அதற்கு முறையான விசாரணை நடத்த மனித உரிமைகளைக் காக்கும் மாமனிதர் ஆகிய நீங்கள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். காவலர்களுக்கு வழங்கப்படும் சீருடை, காலனி, மற்றும் இதர பொருட்கள் அனைத்துமே தரம் தாழ்ந்ததாக உபயோகிக்க இயலாததாக வழங்கப்படுவதை தாங்கள் விசாரித்து அப்பொருட்களை உபயோகிக்கக்கூடிய வகைகளில் வழங்க தாங்கள் உத்தரவிட வேண்டும்.

காவல் துறையினரிடம் மாதமாதம் வசூலிக்கப்படும் போலீஸ் பெனிபிட் பண்ட் (PPF)எனப்படும் பணம் எதற்காக வசூல் செய்கிறார்கள். அந்தப் பணத்தை எதற்காக உபயோகிக்கிறார்கள் என்பதற்கான கணக்கு வழக்குகளை பெறுவதற்கு தாங்கள் ஒரு ஆணையிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். காவல் ஆய்வாளர்கள் அவர்கள் பதிவு செய்யும் வழக்கிற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் விசாரணைபடி எனப்படும்  இன்வெஸ்டிகேஷன் சார்ஜஸ் எந்த காவல்துறை அதிகாரிக்கும் சென்று சேருவது கிடையாது. ஏனென்றால் நீங்கள் பாராட்டும் அந்த உயர் அதிகாரிகள் அதை திருடுகின்றனர். அவர்களுக்கு சேர வேண்டிய விசாரணை படி முறையாக காவல் நிலைய அதிகாரி ஆய்வாளருக்கு சென்றடைய தாங்கள் உத்திரவிடுங்கள். 

மனித உரிமை என்பது மனிதர்கள் அனைவருக்குமான உரிமையே. அதற்கு காவல்துறை மட்டும் விதிவிலக்கல்ல. ஆகையால் காவலர்களுக்குள்ள குறைகளை களைய வேண்டியதும் கட்டாயமே. அதனை சம்பந்தப்பட்டவர்கள் நிவர்த்தி செய்யவேண்டும்’’என மனம் வருந்த கோரிக்கை விடுக்கின்றனர். 

click me!