“ஜூன் 14 முதல் ஜூலை 19 வரை சட்டமன்ற கூட்டம்...” சபாநாயகர் தனபால் அறிவிப்பு

First Published Jun 7, 2017, 12:46 PM IST
Highlights
Legislative Assembly from June 14 to July 19 by dhanabal


தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி ஜூலை 19ம் தேதி வரை நடைபெறுவதாகவும், அதில் அனைத்து துறைக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என சபாநாயகர் தனபால் கூறினார்.

மேலும், ஜிஎஸ்டி மசோதா குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என அவர் செய்தியளார்களிடம் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. மார்ச் மாதம் பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆர்கே நகர் இடைத் தேர்தலையொட்டி, சட்டமன்ற கூட்டம் மறு தேதி அறிவிக்காமல் முடிந்தது.

இதையடுத்து, சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். இதுகுறித்து கவர்னர், சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில், இன்று காலை சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நடந்தது. அதில், அமைச்சர்கள், எதிர்க்கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை சட்டமன்றம் கூடும். அப்போது, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் சபாநாயகர் தனபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வரும் 14ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை சட்டமன்றம் கூடுகிறது. அதில், 24 நாட்கள் செயல்படும். காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டதில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடக்கும். அதில் கேள்வி நேரமும் வழங்கப்படுகிறது.

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும்போது, மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும். இதுவரை ஜிஎஸ்டி மசோதா குறித்து எந்த தகவலும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. அப்படி வந்தால், அதுபற்றி பேசுவோம்.

சட்டமன்றம் 24 நாட்கள் நடத்துவதற்கு எதிர்க்கட்சியினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதில், கேள்வி நேரத்தின்போது, அவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படும். இதனால், அவர்களும் திருப்தி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!