மெரினா கடற்கரை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி 5 சதவீத ஒதுக்கீடு .. முதலமைச்சருக்கு கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 19, 2020, 2:27 PM IST
Highlights

வியாபாரம் செய்வதற்கான இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 37-சி யின்படி  வழங்க வேண்டும். ஆனால் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுகுறித்து எதுவும்  குறிப்பிடப்படவில்லை,

சென்னை மெரினா கடற்கரை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படி 5 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

 

சென்னை மெரினா கடற்கரையில் உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் உள்ளிட்ட சிறு வியாபாரம் செய்வதற்கான கடைகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க டிசம்பர்-26 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வியாபாரம் செய்வதற்கான இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 37-சி யின்படி  வழங்க வேண்டும். 

ஆனால் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுகுறித்து எதுவும்  குறிப்பிடப்படவில்லை, எனவே மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்வதற்கான இட ஒதுக்கீட்டில் 5 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளின் சட்டப்பூர்வ உரிமைகளின் படி சென்னை மாநகராட்சி வழங்க உரிய உத்தரவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

click me!