
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அவர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியது.
தான் ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்று கூறி அவ்வப்போது மனுத் தாக்கல் செய்து திடீர் பரபரப்பைக் கிளப்புபவர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. அம்மா அனுதாபி என்றார். அதிமுக.,வைச் சேர்ந்த வக்கீல் என்றார். அடையாள அட்டை இருக்கிறது என்றார்.
ஆனாலும், ஜெயலலிதா மறைந்த நேரத்தில் திடீர் என ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டார். அவருக்கு அதிமுக.,வினர் நேரடியாகவே மிரட்டல் விடுத்தனர். அது குறித்த வீடியோ ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பரவலாக வைரலானது. அதிமுக.,வினர் சூழ்ந்து கொண்டு அடிக்காத குறையாக அவரை மிரட்டியதைக் கண்டு பலரும் சிரித்தார்கள். ஆனாலும், வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி இதை எல்லாம் விடுவதாக இல்லை. ஜெயலலிதா மகள் என சொல்லிக் கொண்ட அம்ருதா விஷயத்திலும் வாய் திறந்தார். யாரும் கண்டு கொள்ள வில்லை. இப்போது, வழக்கம் போல் மீண்டும் மனு தாக்கல் செய்தார் உயர் நீதிமன்றத்தில்.
ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவைப் பார்த்த நீதிபதிக்கு தலையை சுற்றியது. பின்னர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஒரு நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற மனு தாக்கல் செய்ததற்கு அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி எச்சரித்தார். இதை அடுத்து மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி. அவரது மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பின்னர், உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களைச் சொல்லி, சம்பந்தப்பட்ட விசாரணை ஆணயத்தை அணுகும்படி நீதிபதி அவருக்கு அறிவுரை வழங்கினார்.