
ஜெயலலிதா சிகிச்சை குறித்து சிசிடிவி காட்சிகள் இருந்தால் வெளியிட வேண்டியது தானே எனவும் சிசிடிவி காட்சிகளை வைத்து பூஜை செய்கிறாரா டிடிவி எனவும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெ மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாகவும் அவை விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. சசிகலாவுடன் இருந்த பன்னீர்செல்வமே இதுகுறித்து விசாரணை கமிஷன் வேண்டும் என போராடி வந்தார்.
இதனிடையே ஜெயலலிதா நலமாக உள்ளதாகவும், பூரண நலம் பெற்று வருகிறார் எனவும், இட்லி சாப்பிடுகிறார் எனவும் பல தமிழக அமைச்சர்கள் பேட்டி அளித்து வந்தனர்.
தற்போது எடப்பாடியும் ஒபிஎஸ்சும் ஒன்றாக இணைந்ததால் அமைச்சரவை சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.
பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாவும் பொய் கூறியதாக தெரிவித்தார்.
மேலும், சசிகலாவைத் தவிர மற்ற யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் அப்போது கூறிய பொய்க்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை பெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் எங்களிடம் உள்ளது எனவும் சசிகலா ஒப்புதல் இல்லாமல் அதை வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ஜெயலலிதா சிகிச்சை குறித்து சிசிடிவி காட்சிகள் இருந்தால் வெளியிட வேண்டியது தானே எனவும் சிசிடிவி காட்சிகளை வைத்து பூஜை செய்கிறாரா டிடிவி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.