#BREAKING அதிமுக விருப்ப மனு தாக்கலில் அதிரடி மாற்றம்... ஓபிஎஸ் - இபிஎஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 1, 2021, 5:11 PM IST
Highlights

மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக தலைமையில் இருந்து அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 24ம் தேதி அன்று அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்யும் பணி தொடங்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு வழங்குவதை தொடங்கி வைத்தனர். 

வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போட்டியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் விருப்ப மனு அளித்துள்ளனர். அதேபோல் அமைச்சர்களில் திண்டுக்கலில் போட்டியிட திண்டுக்கல் சீனிவாசனும, கோபி தொகுதிக்கு செங்கோட்டையனும், குமாரபாளையத்தில் தங்கமணியும், தொண்டாமுத்தூரில் எஸ்.பி. வேலுமணியும் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.

மார்ச் 5ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக தலைமையில் இருந்து அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 24.2.2021 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு விருப்ப மனு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

6.4.2021 அன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு 3.3.2021 - புதன் கிழமை வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் என்றும்; அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இக்காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

tags
click me!