கம்பி எண்ணாமல் தப்பிய திமுக முன்னாள் அமைச்சரின் மகன்... நில அபகரிப்பு வழக்கை வாபஸ் பெற வைத்து சாமர்த்தியம்..!

Published : Apr 03, 2019, 05:03 PM ISTUpdated : Apr 03, 2019, 05:16 PM IST
கம்பி எண்ணாமல் தப்பிய திமுக முன்னாள் அமைச்சரின் மகன்...  நில அபகரிப்பு வழக்கை வாபஸ் பெற வைத்து சாமர்த்தியம்..!

சுருக்கம்

நில அபகரிப்பு முயற்சி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் உள்ளிட்டோர் மீதான 16 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

நில அபகரிப்பு முயற்சி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மகன் உள்ளிட்டோர் மீதான 16 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. 

சேலம் அங்கம்மாள் காலனியில், நகை கடை அதிபர் பிரேம்நாத்துக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், அந்நிலத்தை விற்க மறுத்ததால், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சேலம் மத்திய குற்றப்பரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், சேலம் திமுக மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ஏ.ராஜா என்கிற ராஜேந்திரன், கவுசிக பூபதி லட்சுமணன், பாரப்பட்டி சுரேஷ், தெய்வலிங்கம், ராமு, சரவணன், அழகாபுரம் ஜான், பிரகாஷ், முரளி, நாராயணன், ஸ்ரீ ரங்கநாதன், பால குருமூர்த்தி ஆகிய 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சேலம் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த சிறப்பு நீதிமன்றம் விசாரணையின் போது குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்த வழக்கின் தீர்ப்பில் தான் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, புதுவை எம்.எல்.ஏ. ஆகியோர் பதவியை இழந்தனர்.  

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் தற்போது உயிருடன் இல்லை எனவும், புகார்தாரருடன் சமரசம் செய்துள்ளதால் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் புகார்தாரருடன் சமரசம் செய்து கொண்டதை ஏற்று வீரபாண்டி ஆ.ராஜா உள்ளிட்ட 16 பேர் மீதான நில மோசடி வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சென்னை திரிசூலத்தில் உள்ள மனநல காப்பகத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுத் தொகையை, 2 வாரத்தில் நன்கொடையாக வழங்க உத்தரவிட்டார். தவறும் பட்சத்தில், இந்த உத்தரவு தானாக ரத்தாகிவிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..