
லாலு பிரசாத் யாதவுக்கு அளிக்கப் பட்டு வந்த இசட் ப்ளஸ் பாதுகாப்பு குறைக்கப் பட்டுள்ளது. இது இனி இசட் பிரிவு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் விவிஐபி.,க்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல் அடிப்படையில் பாதுகாப்பின் தன்மை கூட்டப் பட்டு அல்லது குறைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதை மையமாக வைத்து, மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது தலைவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
இப்படி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், அண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில், பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், இசட் பிளஸ் இல் இருந்து இனி இசட் பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படும்.
இந்த இசட் பிரிவு பாதுகாப்புப் பணியில், மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர்.
அது போல், பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சிக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு முற்றிலும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கு இனி மாநில போலீஸாரே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.