திடீர் பல்டி அடித்த குமாரசாமி ! தேர்தலுக்கு தயாராகுங்கள் என தொண்டர்களுக்கு அசைன்மென்ட் !!

By Selvanayagam PFirst Published Aug 5, 2019, 11:10 AM IST
Highlights

அரசியலைவிட்டு விலக நினைப்பதாக தெரிவித்திருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர்  குமாரசாமி, திடீர் திருப்பமாக “தேர்தலுக்கு தயாராக இருங்கள்” என்று மஜத தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணியில் முதலமைச்சராக குமாரசாமி 14 மாதங்கள் கர்நாடகாவை ஆட்சி செய்தார். இரு கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  குமாரசாமி “நான் அரசியலுக்கு வந்ததும் முதல்வரானதும் ஒரு விபத்து. அரசியலிலிருந்து வெளியேறுவது குறித்து யோசித்து வருகிறேன். அமைதியாக வாழவே விரும்புகிறேன்” என்று அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று கட்சித் தொண்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். மாண்டியாவில் மஜத தொண்டர்கள் மத்தியில் பேசிய குமாரசாமி, “தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறலாம். அல்லது 224 தொகுதிகளுக்கும் புதிதாக தேர்தல் நடத்தப்படலாம்.
 


எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நீண்டகாலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்புகிறேன். எனவே தேர்தலுக்கு தயாராக இருங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார். தற்போது நாம் எந்த கூட்டணியிலும் இல்லை. நமக்கு, எந்த கூட்டணியும் தேவையில்லை. எனக்கு அதிகாரம் தேவையில்லை. உங்களின் அன்பு தான் தேவை என்றும் குமாரசாமி பேசியுள்ளார்.

அரசியலைவிட்டு விலக நினைப்பதாக தெரிவித்திருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, திடீர் திருப்பமாக “தேர்தலுக்கு தயாராக இருங்கள்” என்று மஜத தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!