'உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்' .. படம்பிடித்தவரை கைது செய்ய வேண்டும். சீமான் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2021, 12:11 PM IST
Highlights

அநாகரிகம். படம்பிடித்தவரை கைது செய்திருக்க வேண்டும்.உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார். சட்டசபைக்குள் ஆபாச படம் பார்ப்பது தவறு என்று சொல்லலாம். ஒருவர்  தனிப்பட்ட முறையில் அறையில் பேசுவதை படம் பிடிக்கிற அளவு  கேடுகெட்ட சமூகமாக மாறி விட்டது 

உலகத்தில் யாரும் செய்யாத ஒன்றையா கே. டி ராகவன் செய்து விட்டார் எனவும், அவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை படம் பிடித்த நபரை கைது செய்திருக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாயோன் பெருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் சீமான் கலந்து கொண்டு மாயோன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். கூறியதாவது, ஆயர்குல தலைவனாக இருந்தவர் மாயோன், பின்னாளில் கண்ணன், கிருஷ்ணனாக மாற்றப்பட்டுவிட்டார். தமிழர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் இல்லை, ஏனவேதான் முன்னோர்களின் இறப்புக்கு மட்டும் சுவர்ரொட்டி ஒட்டுகிறோம் என்றார். சுவரொட்டிகள் சென்னையில் அழகை கொடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் சுவற்றில் விளம்பரம் எழுதுவதை தடுக்கவில்லை,  அதேபோல் நெகிழி பயன்பாட்டையும் தடுக்காமல் சிங்காரச் சென்னை எப்படி உருவாகும் என கேள்வி எழுப்பினார்.  

அப்போது கே. டி ராகவன் குறித்த ஆபாச பட சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிடுவது அநாகரீகத்தின் உச்சம், ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் படம் பிடிப்பது சமூகக் குற்றம், அப்படி படம்பிடித்த நபரை இந்நேரம் கைது செய்திருக்க வேண்டும். உலகத்தில் நடக்காத ஒன்றை கே.டி ராகவன் செய்துவிட்டார். சட்டசபையில் ஆபாச படம் பார்ப்பது தவறு என்று கூறலாம், ஆனால் ஒருவரின் தனிப்பட்ட அறையில் தனிப்பட்ட முறையில் பேசியதை எப்படி தவறு என்று சொல்ல முடியும் என்றார். இந்து அறநிலைத்துறை என்பதை தமிழர் சமய அறநிலைத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அப்போது அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். 

நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நடிகர் வடிவேலு மீண்டும் திரையுலகிற்கு வர வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்ற சீமான், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதாக வந்த செய்தியை கவலையாக பார்க்கிறேன் என்றும், அதே நேரத்தில் கேரளாவில் இரவு நேர ஊரடங்கு போடுவதாக கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும், கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் அவர் கூறினார்.
 

 

click me!