கபில்சிபல் இப்படி விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.. ரவுசு காட்டும் சீனியரை ரவுண்ட் கட்டும் அழகிரி.!

By vinoth kumarFirst Published Sep 30, 2021, 7:20 PM IST
Highlights

சோனியா காந்தியின் கடும் உழைப்பினால் அமைந்த மத்திய அரசில் பதவி சுகம் அனுபவித்த போது கபில்சிபல் போன்றவர்கள் தலைமைக்கு எதிராக என்றைக்காவது கருத்து கூறியது உண்டா? பதவியில் இருந்தபோது கருத்து கூறாதவர்கள், இப்போது கருத்து கூறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயலாகும்.

தலைமைக்கு எதிராக கருத்து கூறும் கபில்சிபல் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு அரசியலை விட்டு ஏழு ஆண்டுகாலம் ஒதுங்கியிருந்த காலத்தில், காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்ற அனைவரின் கோரிக்கையை ஏற்று, காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் சோனியா காந்தி. அவர் தலைமை ஏற்ற பிறகு, நான்கு மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் ஆட்சி 14 மாநிலங்களில் விரிவடைந்தது. அவரது கடுமையான முயற்சியின் காரணமாக, 2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அவரது பரிந்துரையின் பேரில், மன்மோகன்சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தது.

இதன்மூலம், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பணியை செய்வதற்கு வாய்ப்பை வழங்கியவர் சோனியா காந்தி. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்த கபில்சிபல் போன்றவர்கள் சோனியா காந்தியை விமர்சனம் செய்வதை காங்கிரஸ் கட்சியினர் எவரும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய விமர்சனங்களை பொதுவெளியில் கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏதாவது கருத்துக் கூற வேண்டியிருந்தால் அதை கட்சி அமைப்புகளின் மூலமாகத் தான் கூற வேண்டுமே தவிர, பொதுவெளியில் விமர்சிப்பது பாஜகவுக்கு சாதகமாகவே அமையும்.

அகில இந்திய காங்கிரசின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகிய சூழலில் தான் சோனியா காந்தி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பொறுப்பை கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் மிகச் சிறப்பாக செய்து வருகிறார். இந்நிலையில், அவரை தற்காலிக தலைவர் என்று அழைப்பதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சோனியா காந்தியின் கடும் உழைப்பினால் அமைந்த மத்திய அரசில் பதவி சுகம் அனுபவித்த போது கபில்சிபல் போன்றவர்கள் தலைமைக்கு எதிராக என்றைக்காவது கருத்து கூறியது உண்டா? பதவியில் இருந்தபோது கருத்து கூறாதவர்கள், இப்போது கருத்து கூறுவது அப்பட்டமான சந்தர்ப்பவாத செயலாகும்.

தமிழக காங்கிரஸ் தலைவராக யார் பொறுப்பில் இருந்தாலும், தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக காமராஜரைத் தான் பொதுமக்களும், காங்கிரஸ் கட்சியினரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல, நாட்டிலுள்ள லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிற தலைவர்களாக சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் விளங்குகிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள்தான் தலைவர்களாக வரமுடியும். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிற ஆற்றல்மிக்க தலைவராக ராகுல்காந்தி செயல்பட்டு வருகிறார். இன்றைக்கு பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குபவர் தலைவர் ராகுல் காந்தி தான்.

இந்நிலையில், பாஜகவை தேசிய அரசியலில் வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்ப்பதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பவர்கள் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாகத் தான் காங்கிரஸ் கட்சியினர் கருதுகிறார்கள். அந்த வகையில், தலைமைக்கு எதிராக கருத்து கூறும் கபில்சிபல் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!