பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கள்ளச்சாராயத்தால் 22 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதிஉள்ளது. இதனை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்பொழுது வரை 22 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 48 பேர் விழுப்புரம் உண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், விஷ சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எக்கியார் குப்பத்தில் மது விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. காவல்துறையினரின் அனுமதியோடு அரசியல் தொடர்பில் இருப்பவர்கள் இந்த மதுவிற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஒரு பக்கம் டாஸ்மார்க் மதுமூலம் விற்பனை, மறுபக்கம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி ஆதரவுடன் சந்து பொந்துகளில் பல்வேறு பகுதிகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது.
பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு; ஒரு பிரிவினர் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
22 பேர் உயிரிழப்பிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். திமுக பிரசாரத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முதல் கையெழுத்து போடுவேன் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்பொழுது வரை அது குறித்து எதுவும் பேசாமல் தமிழ்நாட்டு வரலாற்றில் 50 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு 22 பேர் உயிரிழந்த சம்பவம் இதுதான். டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக உயர்த்தி உள்ளனர்.
மது விற்பனையை விஸ்திகரிப்பு செய்ய இலக்கு நிர்ணயத்திருப்பதை என்னவென்று சொல்வது? இந்தத் துறை அமைச்சர் எங்கே ஓடி ஒளிந்து கொண்டுள்ளார் என்பது தான் கேள்வி. மக்களின் உயிரை பாதுகாப்பதை தவறிவிட்ட அரசு ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க தகுதி இல்லாத அரசு இந்த அரசு. தமிழக முதலமைச்சரும், செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும். முதலமைச்சர், மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர், இந்த மாவட்ட அமைச்சர் ஆகிய மூன்று நபர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
தவறான திசையில் வந்த தனியார் பேருந்து; ஓட்டுநரின் கவனக்குறைவால் கால்களை இழந்த பெண்
கடந்த ஆட்சியில் சாராயம் குடித்து தமிழக பெண்கள் விதவையாகியுள்ளனர் என டிவிட் போட்ட கனிமொழி எம்பி அவர்கள் ஏன் இப்பொழுது டிவிட் போடவில்லை இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நேரில் வந்து கூட பார்க்கவில்லை. செய்த குற்றத்தை மறைப்பதற்காக இவர்கள் இழப்பீடு தொகையாக 10 லட்சம் ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்குகிறார்கள்.
பூரண மதுவிலக்கை கொண்டு வருவதற்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது இதில் ஏதோ சதி இருக்கிறது. சாராயத்தில் மெத்தனாலை கலந்தது யார். இதில் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது. இதனை கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்த கள்ளச்சாராயம் இறப்பு சம்பவத்தில் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது. இதனை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.