வெற்றி தோல்வியை தாண்டி உழைப்பை போட வேண்டும், கூட்டணியில் இருக்கின்றோம், கூட்டணியில் இல்லை, தனியாக போட்டியிடுகிறோம், போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை போன்ற எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு கட்சிக்காக உழைக்க வேண்டும் என அண்ணாமலை பாஜக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜக மாநில செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, தமிழ் மக்கள் மீது பிரதமர் அதிகளவில் அன்பு வைத்துள்ளதாகவும், ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் மோடி இருப்பதாக கூறினார். பிரதமர் மோடி 9 ஆண்டை கடந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகவும் இன்னும் 5 ஆண்டு காலம் மோடியை பிரதமராக ஆக்க வேண்டும் அதற்காக தேனீக்களை போல் சுறுசுறுப்பாக பணி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் இருந்து எத்தனை எம்பிகளை டெல்லிக்கு அனுப்ப போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும் என தெரிவித்தார். இந்தியாவில் நக்சல் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், பி.எப்.ஐ போன்ற பயங்கரமான இயக்கங்கள் தடை செய்யப்பட்டு தைரியமான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை பிரதமரின் நலத்திட்டங்களை பெரிய இயக்கமாக தமிழக மக்களிடம் எடுத்து செல்ல உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சிலிண்டர் வெடிகுண்டு கலச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம் தலைத்தூக்கி உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் எப்போது கொலை நடக்கும் , கலவரம் நடக்கும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடி தான் புதுமை பெண்களை உருவாக்கி வருகிறார் என தெரிவித்த அவர் திராவிட மாடல் அரசை போல வீரவசனம் பேசுவதில்லை என்றார். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பல பரீட்சை எனவும் அனைத்து தீய சக்திகளும் ஒரு அணியில் திரண்டு உள்ளதாகவும் விமர்சித்தார்.
நாம் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், இன்றிலிருந்து பாராளுமன்ற தேர்தல் பணி நமக்கு ஆரம்பித்து விட்டது என தெரிவித்தார். வெற்றி,தோல்வியை தாண்டி உழைப்பை போட வேண்டும், கூட்டணியில் இருக்கின்றோம், கூட்டணியில் இல்லை, தனியாக போட்டியிடுகிறோம், போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை போன்ற எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு கட்சிக்காக உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். உன்னுடைய வேலையை மட்டும் நீ செய், எந்த பலனையும் எதிர்பார்க்காதே என பகவத் கீதையை மேற்கோள் காட்டி பேசிய அண்ணாமலை, வருகின்ற ஏழு மாத காலமும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டர்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்
பேனர் வைப்பதில் தகராறு; ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கால் பதற்றம்