ஒரு கோடி ரூபாய் கொடுக்கணும்... மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கிருஷ்ணசாமி..!

By Asianet TamilFirst Published May 12, 2021, 9:29 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று புதிய தமிழக கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 
 

இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பெருந்தொற்று பணிக் காலத்தில் உயிரிழக்க நேரிட்டால் ரூபாய் 25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறீர்கள். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் இது எந்த விதத்திலும் போதுமானது அல்ல. மருத்துவர்கள்; செவிலியர்கள்; தூய்மைப் பணியாளர்கள்; ஸ்கேன், எக்ஸ்-ரே, ரத்த பரிசோதனைகூட ஆய்வாளர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தடுப்பு பணிகளை செவ்வனே செய்து வருகிறார்கள்.
2020 ஜனவரிக்கு பிறகு, தற்போது வரையிலும் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும், செவிலியர்களும் மற்றும் காவல்துறை, வருவாய் துறை, ஊடகத்துறை போன்ற பல துறைகளை சார்ந்தோரும் கொரோனா தொற்றால் பணிக் காலத்தில் மரணம் எய்தியிருக்கிறார்கள். எனவே, உயிரிழந்த அனைவரையும் முன் களப்பணியாளர்களாகவே கருதி, அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு தலா ஒரு கோடியும், செவிலியர்கள் மற்றும் பிற துறையை சார்ந்தவர்களுக்கு குறைந்தது தலா ரூபாய் 50 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று கடிதத்தில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 

click me!