புதுச்சேரியில் திமுக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டா.? திமுக கனவு பலிக்காது.. பாஜக அதிரடி அறிவிப்பு.!

By manimegalai aFirst Published May 12, 2021, 9:02 PM IST
Highlights

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்று புதுச்சேரி  மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.
 

புதுச்சேரியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 8 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 6 தொகுதிகளிலும் வென்றனர். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக வென்றதன் மூலம் தனிப் பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். பாஜக சார்பில் துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜகவுக்கு அமைச்சர்கள் ஒதுக்கீடு குறித்து ரங்கசாமி இன்னும் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. புதுவை சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களும் இன்னும் பதவியேற்கவில்லை. இதற்கிடையே சட்டப்பேரவைக்கு 3 நியமன எம்எல்ஏக்களாக தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை மத்திய பாஜக அரசு நேரடியாக நியமித்துள்ளது.
என்.ஆர். காங்கிரஸுக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், அக்கட்சிக்கு இணையாக சம பலம் உள்ளது என நிரூபிக்கும் வகையில் பாஜக நியமன எம்எல்ஏக்களை நியமித்துள்ளதாக புதுச்சேரியிலும் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி என்.ஆர்.காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.  “புதுச்சேரியில் திமுக, கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளின் இந்தக் கனவு பலிக்காது. பாஜக சார்பில் துணை முதல்வர், அமைச்சர்கள் பதவி ஏற்று தங்கள் பணியைச் செய்வார்கள். என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும்” என்று சாமிநாதன் தெரிவித்தார்.
 

click me!