பாஜகவும் அதிமுகவும் படுசூப்பர்..! ஸ்டாலினுக்கு டென்ஷன் கொடுக்கும் கே.பி.ராமலிங்கம்..!

By Manikandan S R SFirst Published May 20, 2020, 8:16 AM IST
Highlights

மக்களுக்கு பணியாற்ற குறிப்பாக விவசாய மக்களுக்காக தொடர்ந்து அரசியலில் இயங்குவேன். பாஜகவும் அதிமுகவும் இந்த ஊரடங்கு நடைமுறை சிறப்பாக செயல்படுத்தி வருகிற போது அவர்களை பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை. 

திமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். முன்னாள் எம்.பி யான இவர், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் முதல்வரும் பிரதமரும் சிறப்பாக செயல்படுவதாகவும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று கூறிய திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கை தேவையற்றது எனவும் விமர்சித்திருந்தார். திமுக முன்னாள் எம்.பி ஒருவர் கட்சி தலைமைக்கு எதிராக பேசியது சர்ச்சையை கிளப்பவே கட்சிப் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட அவர், பின் நிரந்தமராக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பிரதமர் மோடியையும், முதல்வர் பழனிச்சாமியையும் கே.பி ராமலிங்கம் புகழ்ந்து பேசியிருக்கிறார். இயற்கை நீர் வள பாதுகாப்பு அமைப்பின் தலைவரான அவர், மத்திய அரசின் திட்டங்களை வரவேற்று செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த 48 நாட்களுக்கு மேல் பொது முடக்கத்தை அமல்படுத்தப்பட்டாலும் நாட்டில் எந்தவிதமான எதிர்ப்பும் குழப்பமும் ஏற்படாத வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடிக்களுக்கான புணரமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் நிலையில் வேளாண் துறைக்கு 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான உற்பத்தி செய்யும் பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாய மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பின் மூலம் இந்திய கிராமபுற பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை பெறுவதோடு இந்திய பொருளாதாரமும் மேம்பட உதவும். பல்வேறு விவசாய சங்கத் தலைவர்களும் இந்த திட்டத்தை வரவேற்று மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்கள்.  பிரதமர் மோடி இந்தியா வல்லரசாக மாறுவதற்கு விவசாயத் துறை தான் உதவும் என்பதை உணர்ந்து செயல்படுகிறார். அவருக்கு இந்திய விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கொரோனா பிரச்சனைகள் முடிந்த பிறகு மீண்டும் எந்தமாதிரியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். மக்களுக்கு பணியாற்ற குறிப்பாக விவசாய மக்களுக்காக தொடர்ந்து அரசியலில் இயங்குவேன். பாஜகவும் அதிமுகவும் இந்த ஊரடங்கு நடைமுறையை சிறப்பாக செயல்படுத்தி வருகிற போது அவர்களை பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை. 2014ல் திமுகவை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்ட போது என் மீதான குற்றசாட்டுகளில் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என வெளிப்படையாக தெரிவித்த பின் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டேன். தற்போதும் நான் கூறியது எனது சொந்த கருத்து தான். அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். கட்சியில் இருந்து என்னை நீக்கியதில் எந்த கவலையும் இல்லை. தொடர்ந்து பொதுவான இயக்கமாக இருக்கும் இயற்கை நீர் வள பாதுகாப்பு அமைப்பி.ன் மூலம் இயங்குவேன். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்,

click me!