
சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து முழுமையாக விரட்டி அடித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கே.பி.முனுசாமி இன்று கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் இரு அணிகளும் சேரக் கூடாது என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலா ஆலோசனைப் படி அரசு செயல்பட்டால் மட்டுமே ஆட்சி கலையும் என்று ஓ.பி.எஸ். கூறியதாக தெரிவித்த அவர், சசிகலா,டிடிவி ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து முழுமையாக நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்.
அதிமுகவின் இரு அணிகளுக்குள்ளும் இனி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டு வந்த நிலையில் கே.பி.முனுசாமியின் இந்த திடீர் பேச்சு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.