5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கலைகட்டிய கோயம்பேடு மார்க்கெட்..!! மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2020, 3:32 PM IST
Highlights

ஓரிரு நாட்களில் கோயம்பேடு சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம். 

கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காய்கறி மொத்த வியாபாரம் இன்று அதிகாலை 5 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தை முழுவதும், வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், கனரக வாகனங்கள் என நகர இடமின்றி நிரம்பி காட்சி அளிக்கின்றன. பெரும்பாலான புறநகர் சில்லரை வியாபாரிகள் நள்ளிரவு முதலே டெம்போகளில் தங்களுக்கு தேவையான காய்கறிகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். 

இதுகுறித்து கோயம்பேடு வணிக வளாக அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகரன் கூறுகையில், "அரசு அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து வியாபாரம் மேற்கொண்டு வருகிறோம். வியாபாரிகள் எந்தத் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதற்கு சங்கத்தினர் ஒத்துழைப்பு அளிப்போம். சிறு வியாபாரிகள் நள்ளிரவு முதலே பொருட்களை வாங்கிச் சென்று வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடித்தல், உடல் வெப்பநிலையை பரிசோதித்தல், சானிடைசர் வழங்குதல் ஆகியவையும் கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளோம். ஓரிரு நாட்களில் கோயம்பேடு சந்தை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம். 

 

வடமாநிலங்களில் மழை பெய்தமையால் காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. காய்கறிகளின் வரத்து போதிய அளவிற்கு உள்ளது", என்றார். இதுகுறித்து கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நல வாரிய சங்க செயலாளர் அப்துல் காதர் கூறுகையில், "கோயம்பேடு வணிக வளாகத்திற்குள் காய்கறிகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்பது போல சில்லறை வியாபாரிகளின் வருகையானது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. தற்போது கோயம்பேடு மொத்த வியாபாரத்திற்கான 200 கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு தமிழக அரசுக்கு நன்றி. அதுமட்டுமின்றி சிறு மொத்த வியாபாரிகளுக்கும் விற்பனையை தொடங்குவதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார்.

 

click me!