கோவை மேயர் யார்..? வாரிசு Vs மனைவிகள்..!! செந்தில்பாலாஜிக்கு அல்வா கொடுக்கும் வேலுமணி !!

By Raghupati R  |  First Published Feb 5, 2022, 7:09 AM IST

கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கபட்டுள்ளதால் திமுகவில் உள்ள நிர்வாகிகள் தங்கள் வாரிசுகளையும், அதிமுக நிர்வாகிகள் தங்கள் மனைவிகளையும்  களமிறக்கியுள்ளனர்.இதனால் கோவை தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது.


கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அக்கட்சியினர் ஏற்கனவே அறிவித்து விட்டனர். அவர்களும் மனுதாக்கல் செய்துவிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு, வீடாக சென்று பிரசாரத்தை தொடங்கி விட்டனர். திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கோவை மாநகராட்சிக்கு 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்தது. 

அதிமுக 99 வார்டுகளிலும், திமுக 74 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக ஒரு இடத்தை கூட்டணி கட்சியான தமிழ்மாநில காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது. தமிழ்மாநில காங்கிரசு வேட்பாளரும் இரட்டை இலை சின்னத்திலேயே  போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் இரட்டை இலை சின்னம் போட்டியிடுகிறது. 

Latest Videos

undefined

அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவதன் மூலம் அதிக வார்டுகளில் வெற்றிக்கனியை பறிக்க அதிமுக வியூகம் அமைத்து தேர்தல் பணி செய்து வருகிறது. திமுக 74 வார்டுகள் போக மீதமுள்ள 26 தொகுதிகளை தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளுக்கு வழங்கியுள்ளது. திமுகவினரும் மேயர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர். மேயர் கைப்பற்றுவதில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

முதல் முறையாக கோவை மேயர் பதவிக்கு மோதிகொள்ளும் அ.தி.மு.க மற்றும் திமுக கட்சிகள் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 69 வார்டுகளில் நேருக்கு நேர் மோதி கொள்கின்றன. இந்த வார்டுகளில் வெற்றிக்கனியை பறிப்பதில் இரு கட்சிகளுமே முனைப்பு காட்டி வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் வியூகங்களை வகுத்து, தாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இருபெரும் கட்சிகள் 69 வார்டுகளில் நேருக்கு நேர் மல்லுக்கட்டுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 57வது வார்டில் சாந்தாமணி, திமுகவின் முக்கிய நிர்வாகியான மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா  97வது வார்டிலும், 52வது வார்டில் நகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் என்.கார்த்திக் மனைவி லட்சுமி இளஞ்செழியன் களமிறங்கியுள்ளார்.ஒருவேளை திமுக கோவை மாவட்ட மேயர் பதவியை கைப்பற்றினால் இந்த மூன்று பேரில் ஒருவருக்கு தான் மேயர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மீனா ஜெயகுமாருக்கு மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். ஆங்காங்கே திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாலும், உட்கட்சி பிரச்சனையை எப்படி சமாளிப்பார் அமைச்சர் செந்தில்பாலாஜி என்று கேள்வி எழுந்து இருக்கிறது. திமுகவை காட்டிலும் பூத் அளவில் அதிமுக வலுவாக உள்ளது.

மேலும் வலுவான வாக்கு வங்கியையும் கொண்டுள்ளது.  எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்த நபர்களே வேட்பாளர்களாக இருப்பதால், உட்கட்சி பூசல் எதுவும் இல்லை.  அதேசமயம் எதிர்கட்சியாக இருப்பதால் அதிமுகவினர் தேர்தல் செலவு செய்ய தயங்குகின்றனர். இருப்பினும் எஸ்.பி.வேலுமணி கெளரவ பிரச்சனையாக எடுத்துக் கொண்டு இருப்பதால், கோவை மாநகராட்சியை கைப்பற்ற கூடுதல் முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நோக்கில் செந்தில் பாலாஜி  வியூகங்களை வகுத்து வருகிறார்.

வழக்கமாக ஆளுங்கட்சிக்கே உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்றாலும், கோவையில் திமுக பலவீனமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வேட்பாளர் தேர்வினால் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. மேயர் வேட்பாளராக அறியப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களின் மனைவி மற்றும் மகள்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது உட்கட்சி பூசலை அதிகரித்துள்ளது. இப்போதைக்கு கோவை மேயர் ரேஸில் எஸ்.பி.வேலுமணி வலிமையை காட்டி வருகிறார் என்பதே கள நிலவரம்.

click me!