
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு எதிராக தமிழ் திரையுலகத்தில் இருந்து பலரும் குரல் எழுப்ப ஆரம்பித்து உள்ளனர்.
தமிழ் சினிமாவின் ஆக சிறந்த நடிகர்களில் ஒருவராக தம்மை நிரூபித்துள்ள நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் மக்களின் வாழ்வில் அரங்கேறிய ஒரு நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு வெளியானது.
விமர்சன ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் ஜெய்பீம் படம் அமோக வரவேற்பை பெற்றிருந்தாலும் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் வன்னியர்கள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து பாமக கடும் எதிர்ப்பு தெரிவிக்க, சினிமா என்ற இடத்தை கடந்து அரசியல் என்ற சுழலில் ஜெய்பீம் பயணித்தது.
9 கேள்விகள் கேட்டு அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் கேட்டு நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஒரு பக்கம் கேலி, கிண்டல்களுக்கு ஆளானலும் ஜெய்பீம் Vs பாமக என்ற பிரச்னை மேலும் பெரிதானது. திரைத்துறையில் கிட்டத்தட்ட 2 வாரங்கள் கழித்து பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர்.
நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பல தளங்களில் இருந்தும் ஆதரவு அறிக்கைகள், குரல்கள் எழுந்துள்ளன. இயக்குநர் டி. ராஜேந்தர், பாரதி ராஜா, பா. ரஞ்சித், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், அறம் கோபி நயினார் உள்ளிட்ட பலர் ஆதரவு கருத்துகளை வெளியிட்டு இருக்கின்றனர்.
இனி எப்படித்தான் படம் எடுப்பது, அரசியல் கட்சிகளை கேட்டுவிட்டுத்தான் படம் எடுக்க வேண்டுமா? படைப்பு சுதந்திரத்தின் அளவுகோல் என்ன என்று கேள்விகள் வலம் வந்துள்ளன. 2 வாரங்கள் கடந்து இப்போது நடிகர் சூர்யாவுக்கு ஆதரவான குரல்கள் திரையுலகத்தில் இருந்து வேகம் எடுத்து உள்ளன.
ஆதரவு இருப்பது போன்று எதிர்ப்புகளும் திரைத்துறையில் எழுந்துள்ளன. இயக்குநர் வ. கவுதமன் நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படைப்பு என்பது ஒரு போதும் புண்படுத்தி விடக்கூடாது என்று குறிப்பிட்டு உள்ள அவர், அந்தோணிசாமி என்ற மிருகம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்தோணிசாமி என்ற கதாபாத்திரம் குருமூர்த்தி என்று பெயரிட்டு குருவையும், அக்னி குண்டத்தையும் அவமானப்படுத்திவிட்டதாக இயக்குநர் வ. கவுதமன் கூறி உள்ளார்.
இந் நிலையில் கடந்த 2 நாட்களாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள் கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது. எப்போதும் தமிழனத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர் சத்யராஜ் ஆதரவு தெரிவித்து வீடியோ வாயிலாக ஒரு பேட்டியை வெளியிட்டு உள்ளார்.
தொடரும் இந்த ஆதரவு அறிக்கைகள், பேட்டிகள், டுவிட்டர் கருத்துகள் சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த ஆதரவு வட்டம் மேலும் நீளவேண்டும் என்றும் படைப்புரிமை என்று பார்க்காமல் பொதுவான கருத்து மோதல்களுடன் இந்த படம் பற்றிய மதிப்பீடு இருக்க வேண்டும் என்றும் சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது கள நிலவரம் மாறி இருப்பதாகவும், ஆதரவு மேலும் அதிகமாகும் என்றும் சூர்யாவின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சூர்யாவை போற்று என்றும் அவர்கள் இணையத்தில் உலா வர ஆரம்பித்து உள்ளனர். ஒட்டு மொத்தமாக சினிமாவை ஆத்மார்த்தமாக நேசிப்பவர்கள் இதுவும் கடந்து போகும் என்று கூறி வருகின்றனர்….!!