கோவை மாவட்ட திமுகவில் செந்தில் பாலாஜி ஏன்..? மு.க. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கை அம்பலப்படுத்திய ஆ.ராசா.!

By Asianet TamilFirst Published Nov 16, 2021, 7:53 PM IST
Highlights

“செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்தபோது முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. செந்தில் பாலாஜியைப் பார்க்கிறபோது, தலைவரின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும், தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் எனத் தீவிரமாக  செயல்படுகிறார்."

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா கூறினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ளா 10 தொகுதிகளில் ஒன்றில்கூட திமுக வெற்றி பெறவில்லை. அனைத்து தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இதனால், கோவை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை. எனவே, கரூரைச் சேர்ந்த செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார். கோவை அருகே உள்ள நீலகிரியைச் சேர்ந்த ராமச்சந்திரன் அமைச்சராக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு திமுக கொடுத்த இந்தப் பொறுப்பு, கோவை மாவட்ட திமுகவினரை புருவம் உயரச் செய்தது.

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துதான் திமுக, இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கருதப்பட்டது. அதற்கேற்ப கோவை மாவட்டத்தில் பம்பரமாகச் சுற்றி வந்துக்கொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. மக்கள் சபை என்ற பெயரில் தொடர்ச்சியாகக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். கோவையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திமுக வெல்ல வேண்டும் என்று அந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினருக்கு அசைன்மெண்டுகளை செந்தில்பாலாஜி கொடுத்து வருகிறார். திமுக சார்பாக மட்டுமல்லாமல், அமைச்சர் என்ற ரீதியிலும் கோவையில் செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

இந்நிலையில் கோவை காளப்பட்டியில் கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. திமுக துணைப் பொதுசெயலாளரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் ஆ.ராசாவின் பேச்சு திமுகவின் திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. கூட்டத்தில் ஆ.ராசா பேசுகையில், “செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்தபோது முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. செந்தில் பாலாஜியைப் பார்க்கிறபோது, தலைவரின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும், தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் எனத் தீவிரமாக  செயல்படுகிறார். கோவை மாவட்டத்தில் திமுக ஏன் தோற்றது என்பதெல்லாம் தலைவருக்கு தெரியும். இந்த மாவட்டத்தில் முன்பு ஓர் அமைச்சர் (எஸ்.பி.வேலுமணி) இருந்தார். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

உளவியல் ரீதியாக  அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்த  வேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவால்  வெற்றி பெற முடியாது என்ற உளவியலை அதிமுகவினருக்கு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் செயல்பட  வேண்டும். இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். இந்த முறை மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை ஸ்டாலினுக்கு இருக்கிறது” என்று ஆ.ராசா பேசினார். அதிமுக 2011-2016 ஆட்சிக் காலத்தில் எஸ்.பி.வேலுமணியும் செந்தில்பாலாஜியும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஒன்றாக இருந்தனர். தற்போது வேலுமணிக்கு எதிராக கோவையை வசப்படுத்த செந்தில் பாலாஜி அஸ்திரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. 

tags
click me!